2017-07-12 15:53:00

மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்


ஜூலை,12,2017. இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான ISISன் பிடியிலிருந்து ஈராக் நாட்டின் மோசூல் நகர் விடுதலை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த விடுதலைக்கென உழைத்த அரசு தரப்பினரையும், ஒத்துழைத்த அனைவரையும், தான் பாராட்டுவதாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

பல்வேறு தளங்களில் மக்களும், அரசும் இணைந்து உழைத்தால் அனைத்தும் சாத்தியம் என்பதை இந்த வெற்றி நமக்கு உணர்த்துகிறது என்று கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இனி தொடரும் நாட்களில், பழிவாங்கும் மனநிலையை முற்றிலும் அகற்றி, ஒப்புரவு வழிகளை அனைவரும் தேடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அனைவரும் இணைந்து மோசூல் நகரை கட்டியெழுப்புவது ஒன்றே, தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் தரக்கூடிய தகுந்த பதில் என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜூலை 9, கடந்த ஞாயிறன்று, மோசூல் நகரை அடைந்த ஈராக் பிரதமர், ஹைதர் அத் அபாதி (Haider at Abadi) அவர்கள், இராணுவ வீரர்களைப் பாராட்டியதோடு, அப்பகுதியை விட்டு வெளியேறிய அனைவரும், குறிப்பாக, கிறிஸ்தவர் அனைவரும், மோசூல் நகருக்குத் திரும்பிவரும்படி அழைப்பு விடுத்தார் என்று, பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.