ஜூலை,13,2017. குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே, திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டு நமக்கு உதவியாக இருக்கும் என்று, குரோவேசிய நாட்டு கர்தினால் Josip Bozanić அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.
குரொவேசியா நாட்டின் Trsat எனுமிடத்தில் அமைந்துள்ள மரியன்னை திருத்தலம் தன் 650வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இவ்விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாகக் கலந்துகொண்ட Zagreb பேராயர் கர்தினால் Bozanić அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
நாசரேத்து இல்லத்தில் அன்னை மரியாவை வானதூதர் கபிரியேல் சந்தித்தபோது, அந்த மாபெரும் நிகழ்வு, எவ்வித வெளி ஆடம்பரமும் இன்றி, அமைதியில் நிகழ்ந்தது என்று தன் மறையுரையில் கூறிய கர்தினால் Bozanić அவர்கள், நாமும் வாழ்வில் அமைதி, செபம் ஆகிய பழக்கங்களை வளர்த்துக்கொள்வதால், இறைவனின் திருவுளத்தை அறியும் வாய்ப்பு பெறுவோம் என்று எடுத்துரைத்தார்.
நாசரேத்தில் அமைந்திருந்த மரியாவின் இல்லம், இத்தாலியின் லொரேத்தோ திருத்தலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வழியில், குரொவேசியா நாட்டின் Trsat எனுமிடத்தில் வைக்கப்பட்டிருந்தது என்ற பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, Trsat மரியன்னை திருத்தலம் அமைக்கப்பட்டது.
1367ம் ஆண்டு, இத்திருத்தலத்திலிருந்து லொரேத்தோவுக்குச் சென்றிருந்த திருப்பயணிகளுக்கு, திருத்தந்தை உர்பானோ அவர்கள், அன்னை மரியாவின் திரு உருவம் ஒன்றை நினைவுப் பொருளாகக் கொடுத்தார்.
இந்த நிகழ்வின் 650ம் ஆண்டு நிறைவு, குரொவேசியா நாட்டின் Trsat திருத்தலத்தில் அண்மையில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்தில் கூடி, அன்னையின் விழாவைச் சிறப்பித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: