2017-07-13 14:05:00

பாசமுள்ள பார்வையில்.. வறுமையிலும் வாழ்த்தும் தாய்


வெளிநாட்டில், சில நிறுவனங்களுக்கு அதிபராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் பார்ப்பதற்காக வந்தார். தனது வீட்டில் சில நாள்கள் தங்கினார். வானம் பொய்த்துப் போனதால், கிராம மக்கள் வறுமையில் வாடுவதை நோக்கினார். அம்மக்களுக்கு உதவ நினைத்த அவர், ஒரு முக்கிய நாளில் அவர்களைத் தன் வீட்டிற்கு வரவழைக்கத் திட்டமிட்டார். அதேபோல், ஒருநாளைக் குறிப்பிட்டு, இன்று, எனது மகளின் பிறந்த நாள், நீங்கள் எல்லாரும் எனது வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்நாளில் வருகை தந்த மக்களிடம், உங்களுக்குப் பரிசுகள் கொடுக்க விரும்புகின்றேன், விரும்பியதைக் கேளுங்கள் என்றார் அவர். பசியால் வாடிய அம்மக்கள் ஒவ்வொருவரும் கேட்ட பொருள்களை இன்முகத்துடன் அளித்தார் அவர். ஒருசிலர், வீட்டுமனை, குடியிருக்க வீடு போன்றவற்றைக்கூட கேட்டார்கள். மக்கள் வரிசையாக நின்று இப்படி பொருள்கள் வாங்குவதையும், அந்தச் செல்வந்தர் மலர்ந்த முகத்துடன் கொடுத்துக்கொண்டிருப்பதையும் கவனித்துக்கொண்டிருந்தார் தாய் ஒருவர். எதுவுமே கேட்காமல், ஓரத்தில் நின்றுகொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தாயைக் கவனித்தார் அந்தச் செல்வந்தர். கேட்டவர் அனைவருக்கும் பொருள்களைக் கொடுத்து முடித்த பின்னர், அந்தத் தாயை அணுகி, அம்மா, உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார் அவர். அதற்கு அந்தத் தாய், நானும் ஓர் ஏழைதான் ஐயா. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் நோக்கி, ஓரிரு வார்த்தைகள் பேசி, அவர்கள் கேட்பதைக் கொடுத்த அழகையும், கருணையையும் கண்டு மகிழ்கின்றேன், எனவே உங்களிடம் எதையும் கேட்பதற்கு மனம் இசையவில்லை, உங்களை வாழ்த்தவே மனது துடிக்கின்றது என்றார். வறுமையிலும் வாழ்த்தத் துடித்த அந்தத் தாயின் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்து போனார் அவர். இத்தாயை, தனது சம்பந்தியாக ஏற்கவும் தீர்மானித்தார் செல்வந்தர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.