சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

சீன மனித உரிமை ஆர்வலர் லியுவுக்கு இரங்கல்

சீன மனித உரிமை ஆர்வலர், லியு ஷியாவோபோவுக்கு அஞ்சலி - EPA

14/07/2017 16:22

ஜூலை,14,2017. சீன மனித உரிமை ஆர்வலர், லியு ஷியாவோபோ (Liu Xiaobo) அவர்கள், கொல்லப்படவிருந்த செம்மறி ஆடு போன்று இருந்தார் என, ஹாங்காங் முன்னாள் ஆயர், கர்தினால் ஜோசப் ஜென் (Joseph Zen) அவர்கள் கூறியுள்ளார்.

சீனாவில் லியு அவர்கள், இவ்வியாழன் இரவு காலமானதையொட்டி, இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, கர்தினால் ஜென் அவர்கள், லியு அவர்கள், இறைவாக்கினர் எரேமியா போன்று தன் இதயத்தில் பதிந்துள்ளார் என்றும், துன்பம் மற்றும், மரணத்தை உள்ளடக்கிய இறைவாக்கினரின் பணியை, அவரின் ஞானம்நிறை வாழ்வு நினைவுபடுத்துகின்றது என்றும், கூறியுள்ளார்.

லியு அவர்கள் சிந்திய இரத்தம், வீணாகப் போகாது எனவும், லியு தம்பதியர் வழியாக, இறைவன், தாயகத்திற்குச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவார் எனவும் குறிப்பிட்டுள்ள கர்தினால் ஜென் அவர்கள், இவரின் ஆன்மா இறைவனில் நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஹாங்காக்கிலுள்ள சீனப் பிரதிநிதித்துவ அலுவலகத்திற்கு முன்பாகவும், ஹாங்காக் முழுவதும், கிறிஸ்தவர்களும், ஏனைய மக்களும், லியு அவர்களுக்காகச் செபிப்பதோடு, அமைதிப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

சீனாவில், மக்களாட்சி மற்றும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் முதன்மையான அடையாளமாகப் பார்க்கப்படுபவர் லியு ஷியாவோபோ. இவருக்கு, 2010ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. ஆயினும், இவ்விருதை நேரில் சென்று பெறுவதற்கு இவர் அனுமதிக்கப்படவில்லை.

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவந்த லியு அவர்கள், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவப் பரோலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இவ்வியாழன் இரவு காலமானார்.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான 61 வயது நிரம்பிய லியு அவர்கள், 1989ம் ஆண்டில் தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற சனநாயகத்திற்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

14/07/2017 16:22