2017-07-14 15:47:00

எல்லாப் படைப்புயிர்களும் நலமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக..


ஜூலை,14,2017. இப்பூமி என்ற பொதுவான இல்லம், எல்லாப் படைப்புயிர்களும் நலமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைவதற்கு, ஒவ்வோர் அரசும் பொறுப்புள்ள விதத்தில் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Laudato si’ மற்றும், மாநகரங்கள்” என்ற தலைப்பில், பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவில், ஜூலை 13, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், குடிமக்கள் அனைவரும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசுகள் ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

படைப்பை மரியாதையோடும், பொறுப்புணர்வோடும் நடத்த வேண்டுமென்பது மனிதரின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டுமென்றும், ஒரு கொடையாக நாம் பெற்றுள்ள படைப்பு, வருங்காலத் தலைமுறைகள் வியந்து அனுபவிக்கும் விதத்தில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

காற்றின் தூய்மைத் தன்மை குறைந்து வருவது மற்றும், கழிவுப்பொருள்கள் தகுந்த முறையில் பராமரிக்கப்படாமல் விடப்படுவது அதிகரித்து வருவது குறித்து, நாம் அக்கறையின்றி இருக்க முடியாது என்று கூறியுள்ள திருத்தந்தை, மாநகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகள் குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேரிகளை உருவாக்கும் ஏழ்மை, வன்முறை மற்றும், அநீதிகளையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர் ஒருவர் ஒருவரைச் சார்ந்து, அன்புடன் வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், அரசியல், கல்வி மற்றும் சமயச் சூழல்களில் ஒன்றிணைந்து உழைப்பதன் வழியாக, இதமான மனித உறவுகளை உருவாக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

“இறைவா உமக்கே புகழ் (Laudato si’) மற்றும், மாநகரங்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கு, ஜூலை 15, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.