2017-07-14 16:24:00

பசியை ஒழிப்பதற்கு எல்லாத் துறைகளும் இணைந்து செயல்பட..


ஜூலை,14,2017. உலகின் இன்றைய நிலையை நோக்கும்போது, 2030ம் ஆண்டுக்குள் பசிக்கொடுமையை ஒழிப்பது, இயலாதப் பணியாக உள்ளது என, திருப்பீட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

உரோம் நகரில் மையத்தைக் கொண்டிருக்கின்ற FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் அண்மைக் கூட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள, அந்நிறுவனத்தின் திருப்பீட பிரதிநிதி, அருள்பணி Fernando Chica Arellano அவர்கள், உலகில் பசியைப் போக்குவதற்கு, அனைத்துத் துறைகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

வேளாண்மை பற்றி FAO நிறுவனத்தில், இம்மாதத்தில் (ஜூலை, 3-8) நடைபெற்ற நாற்பதாவது அமர்வு பற்றி கருத்து தெரிவித்த அருள்பணி Fernando Chica அவர்கள், 2030ம் ஆண்டுக்குள், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை எட்டுவதற்கு, ஐ.நா. முயற்சித்து வருகின்றது, இந்த இலக்கை எட்டுவதற்கு, பொது மக்கள், தனியார் துறைகள் முதல், எல்லாத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டுமென்று பரிந்துரைத்தார்.

வீணாகும் உணவுப்பொருள்களைப் பொருத்தவரை, அவை நுகரும் தன்மை, வாழும் முறைகள், மற்றும் அறநெறிகளோடு தொடர்புடையவை என்றும், கூறினார் அருள்பணி Fernando Chica.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.