சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ சுற்றுச்சூழல்

இயற்கை வேளாண் பெண்கள் அமைப்புக்கு ஐ.நா. விருது

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் பெண் - RV

15/07/2017 15:30

ஜூலை,15,2017. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, பெண்களால் நடத்தப்படும் Swayam Shikhan Prayog என்ற அமைப்புக்கு, UNDP என்ற, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம் வழங்கும் 2017ம் ஆண்டுக்கான Equator விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்விருதுக்கென, 120 நாடுகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 15 அமைப்புகளுக்கு, இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து, Swayam Shikhan Prayog அமைப்பு மட்டுமே இவ்விருதுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஐ.நா.வின் காலநிலை விருதையும், இந்த அமைப்பு கடந்த ஆண்டு வென்றது. மகாராஷ்டிர கிராமங்களில், சூரிய ஒளியாற்றல் மூலம் மின்சார வசதி மற்றும் பசுமை அடுப்பு வசதிகளை உருவாக்கித் தந்ததற்காக, இவ்வமைப்பு இவ்விருதைப் பெற்றது.

2009-ம் ஆண்டிலிருந்து மராத்வாடா பகுதியில் செயலாற்றிவரும் இந்த அமைப்பு, ஏறக்குறைய 72 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இயற்கையைப் பாதுகாக்கும் வேளாண் பணிகளில் பெண்களை எப்படிச் சிறப்பாக ஈடுபடுத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.

1993ம் ஆண்டில், மகாராஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்திற்குப்பின், பிரேமா கோபாலன் என்பவர், பெண்களை ஒன்றுதிரட்டி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். கல்வியறிவு இல்லாத, வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள அந்தப் பெண்களிடையே சுயஉதவிக் குழுக்களையும் இவர் உருவாக்கினார். இவர், 1998ம் ஆண்டில் அந்தக் குழுக்களை ஒன்றிணைத்து, சுயகல்வியின் மூலம் முன்னேற்றம் எனப் பொருள்படும், Swayam Shikhan Prayog என்ற அமைப்பையும் தொடங்கினார்.

ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி

15/07/2017 15:30