2017-07-15 15:33:00

மரண தண்டனைக்கு எதிராக ஜப்பான் ஆயர்கள்


ஜூலை,15,2017. ஒருவர் கொலையாளியாக இருந்தபோதிலும், அந்த மனிதரைக் கொலை செய்வது, மற்றொரு கொலையாகும் என, ஜப்பான் ஆயர்கள், மரண தண்டனைக்கு எதிரான தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜப்பானில், இவ்வெள்ளியன்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, ஆயர்களின் சார்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள, நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami அவர்கள், மனித சமுதாயம் ஒன்றிணைந்து வாழும் உணர்வை வளரத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நாம் எல்லாரும், கடவுளின் குழந்தைகள் என்பதை உணர வேண்டும் என்றும், கத்தோலிக்கத் திருஅவை, மரண தண்டனைக்கு எதிராக, தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றது என்றும், மேலும் கூறியுள்ளார் பேராயர் Takami.

61 வயது நிரம்பிய Masakatsu Nishikawa என்பவர், 1991ம் ஆண்டில், நான்கு பெண்களைக் கொலை செய்தவர், மற்றும், 34 வயது நிரம்பிய Koichi Sumida என்பவர், 2011ம் ஆண்டில், தன்னோடு வேலை செய்தவரைக் கொலை செய்தவர். 

இவ்விருவருக்கும் இவ்வெள்ளியன்று நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனைகள், 2012ம் ஆண்டு டிசம்பரில், Shinzo Abe அவர்கள், பிரதமராகப் பதவியேற்றபின், ஜப்பானில் நிறைவேற்றப்பட்டுள்ள 18, மற்றும், 19வது மரண தண்டனைகளாகும் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.