2017-07-17 15:57:00

கென்ய மதத்தலைவர்கள் : தேர்தலில் நம்பகத்தன்மை உருவாகட்டும்


ஜூலை,17,2017. கென்யாவில் விரைவில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் நடத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.

கடந்த வாரத்தில் கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற பல்வேறு சமூக அமைப்புக்களின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வழைப்பை விடுத்துள்ள கென்ய மதத்தலைவர்கள், தேர்தலில் நம்பகத்தன்மை குறையும்போதுதான் தேர்தல் காலத்திலும், அதைத்தொடர்ந்த காலங்களிலும் மோதல்கள் இடம்பெறுகின்றன என கூறியுள்ளனர்.

முரண்பாடுகளுக்கு சட்டரீதியாக தீர்வுகாணல், வன்முறைகளை தடுக்க முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை, பகைமையுடன் கூடிய பிரச்சாரங்களையும், சகிப்பற்றதன்மைகளையும் தவிர்த்தல், தேர்தல் அவையின் சுதந்திரத்தை மதித்தல் போன்றவை வழியாக, தேர்தலை நம்பகத்தன்மையுடையதாக மாற்றமுடியும் என, மேலும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், கென்ய மதத்தலைவர்கள்.

கென்யாவில் தற்போது, பெண் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள மதத்தலைவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போரின் பொறுப்புணர்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வன்முறைகளைத் தூண்டுவோருக்கு வாக்களிப்பதிலிருந்து கென்ய மக்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டின் மதத்தலைவர்கள்.

ஆதாரம்: REI /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.