2017-07-17 16:08:00

கோவாவில் தொடரும் கல்லறை தாக்குதல்கள்


ஜூலை,17,2017. கோவாவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டும், சிலுவைகள் உடைக்கப்பட்டும் வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் கோவா பேராயர் Filipe Neri Ferrao.

கடந்த சில நாட்களில் கோவாவில் 16 கல்லறைகள் சேதமாக்கப்பட்டும், கல்லறைத் தோட்டத்தின் வாசலில் இருந்த பெரிய சிலுவை சேதமாக்கப்பட்டும், 5 மரச்சிலுவைகளும், ஒன்பது பளிங்குக்கல் சிலுவைகளும் உடைக்கப்பட்டும் உள்ளன.

மதங்களிடையே மோதல்களையும் சமூகத்தில் விரோத மனப்பான்மைகளையும் உருவாக்க நினைக்கும் சமூக விரோத சக்திகளால் இச்செயல்கள் ஆற்றப்படுகின்றன என்றார், பேராயர் Ferrao.

இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பழிவாங்கும் எண்ணங்களை கைவிட்டு, மதங்களுக்கு இடையே பகைமை நெருப்பு கொழுந்து விட்டு எரியாமல் தடுப்பதை உறுதிச்செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த பேராயர் Ferrao அவர்கள், மதங்களிடையே இணக்கம், அமைதி என்ற உன்னத பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கோவா மக்கள், அதை எச்சூழலிலும் கட்டிக்காக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இச்சம்பவங்கள் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட, இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் Sajan K George அவர்கள், கடந்த மாதம் கோவாவில், அனைத்திந்திய இந்து மாநாடு இடம்பெற்றதிலிருந்து, கிறிஸ்தவ கல்லறைகள் மற்றும் சிலுவைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றார்.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.