2017-07-17 16:20:00

மன்னிக்கும், குணமளிக்கும் வல்லமையில் பங்குபெறுவோம்


ஜூலை,17,2017. உக்ரைன் நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் துன்பங்களில் தாங்கள் தனியாக இல்லை, இயேசுவும் உடனிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார், அந்நாட்டில் மேய்ப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் லியானார்தோ சாந்த்ரி.

உக்ரைனில் பயணம் மேற்கொண்ட, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் சாந்த்ரி அவர்கள், இஞ்ஞாயிறன்று அந்நாட்டின் Zarvanytsia திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகையில், இயேசுவின் குணமளிக்கும் புதுமைகள் பல, நோயுற்றோர் அல்லது அவர்களை கொணர்ந்தோரின் விசுவாசத்தோடு தொடர்புடையதாக இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டி, நாமும் நம் விசுவாசத்தை அதிகரிக்கும்படி இயேசுவை நோக்கி வேண்டுவோம் என அழைப்புவிடுத்தார்.

இறைவனின் இரத்தத்தில் திருமுழுக்குப் பெற்று, அவரில் நம்பிக்கை கொண்டு வாழும் நாம் ஒவ்வொருவரும், அவரின் மன்னிக்கும் மற்றும் குணப்படுத்தும் வல்லமையிலும் பங்குபெறவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் கர்தினால்.

மன்னிப்பையும் குணப்படுத்தலையும், அதாவது, ஒப்புரவையும் மன்னிப்பின் செயல்களையும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களிலிருந்தே துவக்குவோம் எனவும்  அழைப்புவிடுத்தார், கர்தினால் சாந்த்ரி.

உக்ரைன் நாட்டு அமைதியையும் அந்நாட்டின் இளையோரையும் அன்னைமரியாவின் கரங்களில் ஒப்படைப்போம் என தன் மறையுரையின் இறுதியில் கூறினார், கர்தினால் சாந்த்ரி

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.