2017-07-17 15:43:00

வாரம் ஓர் அலசல் – நன்மை மட்டுமே செய்பவர்களாக...


ஜூலை,17,2017. மரக்கிளையிலிருந்து தவறி விழுந்த தேள் ஒன்று, நடு ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தது. உயிருக்காகக் கடுமையாய்ப் போராடிக் கொண்டிருந்த அந்தத் தேளிற்கு, ஆமை ஒன்று உதவ முன்வந்தது. நண்பரே, என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள், உங்களை கரை சேர்த்துவிடுகிறேன் எனக் கூறியது ஆமை. எப்படியோ பிழைத்துவிட்டோம் என எண்ணிய தேள், ஆமையின் முதுகில் ஏறி அமர்ந்தது. ஆமை கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியவுடன் முதுகில் ஏதோ டொட் டொட் என்ற சத்தம் கேட்டது. என்ன நண்பரே, முதுகில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கேட்டது ஆமை. அதற்குத் தேள் சொன்னது – ஒன்றுமில்லை நண்பரே, உங்களைக் கொட்டிப் பார்க்கிறேன் என்று. ஆற்று வெள்ளத்தில், உங்கள் உயிரைக் காப்பாற்றி, உங்களைக் கரைச் சேர்க்க முயற்சி செய்கிறேன், ஆனால் நீங்கள் என்னைக் கொட்டிப் பார்க்கின்றீர்களே, இது நியாயமா என்று கேட்டது ஆமை. அதைப் பற்றிக் கவலைப்படாமல் செல்லுங்கள், இது எனது குணம் என்று சொன்னது தேள். நம் வாழ்விலும் இப்படித்தான். நம் நற்குணத்தால் பயன்பெற்ற ஒருவர் நம்மைப் புறக்கணிக்கலாம், அல்லது நமக்கு எதிராகக்கூட செயல்படலாம். அது அவர்களின் இயல்பாகவும் இருக்கலாம். ஆனால் உதவி செய்பவர்களின் இயல்பு என்றுமே மாறிவிடக் கூடாது. கயவர்களின் செயல்களைப் பார்த்து நல்லவர்கள் தங்கள் குணங்களை மாற்றிக் கொண்டால் உண்மையாகவே நன்றியுணர்வு உள்ளவர்களுக்கு, நல்லவர்களின் கருணை கிட்டாமல் போகும். நல்லவர்களுக்கும், நன்மைபுரிபவர்களுக்கும் கிடைக்கும் மன நிறைவும், வாழ்வின் முழுமையும் நல்லவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அயரா உழைப்பினால், நல்லவர்களாக, நன்மை மட்டுமே செய்பவர்களாக விளங்கும் ஒரு சிலர் இதோ...  

பிரீத்தி (Preethi) சீனிவாசன் அவர்கள், சென்னையில் Soulfree என்ற பிறரன்பு அமைப்பின் நிறுவனர். எதில் அடியெடுத்து வைத்தாலும் வெற்றியைத் தழுவிக்கொண்டிருந்த இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் கல்லூரியில் படிக்கும்போது பாண்டிச்சேரிக்குச் சுற்றுலா சென்றிருந்தவேளையில்,நடந்த விபத்தில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால், கழுத்துக்குக் கீழே, உடல் முழுவதும் செயலிழந்தது. வீட்டில் இவரைக் கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஒருநாள் இவரது அம்மா, ‘உன்னைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். கவனிக்க ஆள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?’ என, கேட்ட வார்த்தைகள் அவரைச் சிந்திக்க வைத்தன. தண்டுவடப் பாதிப்பு என்பது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு விபத்து நடந்ததும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும், எப்படித் தூக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வுக் கல்வி நம்மிடம் இல்லை. எனவே, பள்ளி, கல்லூரி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் மோட்டிவேஷனல் ஸ்பீச்’கொடுத்து வருகிறார் அவர். அச்சமயங்களில், ஒருவித மன இறுக்கத்துடனேயே இருப்பவர்களிடம், ‘உங்களிடம் சோகம் குடிகொள்ளும்போது ஒருநிமிடம் கண்களை மூடி என்னை நினையுங்கள்’என வலியுறுத்துகிறார். இவரின் பெற்றோர் திடீரென இறந்துவிட, 88 வயதான இவரது பாட்டியோடு இவர் வாழ்ந்து வருகிறார். ‘வாய்ஸ் சாஃப்ட்வேர்’மூலம் பணிசெய்து சம்பாதிக்கிறார் பிரீத்தி.

பிரீத்தி சீனிவாசன் அவர்கள் சொல்கிறார் - என்னால் ஒரு பணியைச் செய்ய முடியும் என்றால், நிச்சயம் முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்பட்டவர்களாலும் செய்யமுடியும், என்னால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நான் உணர்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட விபத்துகூட காரணமுள்ளதாகவே தோன்றியது. சேவையின் மூலம் என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதுதான் இலட்சியம் என்று. உடல் உறுப்புகள் கடுமையாய் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் வேலைகளைத் தாங்களாகவே செய்வதற்கு உதவும் சக்கர நாற்காலி வசதிகள் மற்றும், மருத்துவ வசதிகளை ‘சோல் ஃப்ரீ’ அமைப்பு செய்துவருகின்றது.

பிரீத்தி அவர்கள் போன்று, சென்னை நந்தியம்பாக்கம், பாரத மாதா ஆதரவற்றோர் இல்லநிர்வாகி உதயமலர் அவர்கள், கைவிடப்பட்ட சிறாருக்கு, கடந்த 45 ஆண்டுகளாகத் தாயாக அடைக்கலம் அளித்துக் காத்து வருகிறார். `நான் படைக்கப்பட்டதே ஆசிரமம் நடத்தத்தான் என, இவர் சொல்லியிருக்கிறார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார். விடுதியில் தங்கிப் படித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்து பணிக்குச் சென்றார். உறவினர் பலர் இருந்தும் யாருடைய தொடர்பிலும் இல்லாததால் வெறுமையை உணர்ந்தார்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதியில் தங்கி, பணிக்குச் சென்று வந்தார். ஒருநாள், வேலைக்குச் செல்கையில், வழியில், ஆதரவின்றி இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தார். விடுதிக்கு வந்தும் அந்தக் குழந்தைகளின் நினைவாகவே இருந்த அவர்,  மறுநாளே அந்தக் குழந்தைகளை அழைத்துவந்து என்னுடன் தங்கவைத்துக்கொண்டார்.  இதன்மூலம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியதாக உணர்ந்தார். இவரின் ஆசிரமம் வழியாக, இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். நான் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருந்தால்கூட, ஓரிரு குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருந்திருப்பேன். இன்றோ நான் பெறாத ஆயிரக்கணக்கான குழந்தைகளின் தாயாக இருப்பது பெருமையாக இருக்கிறது. என் சாவின் விளிம்புவரை இக்குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே, என் ஆசையும் கனவும் என்கிறார் உதயமலர். (நன்றி அவள் விகடன்)

ஒரு காலத்தில், வறுமையினால், ஏழைச் சிறார் காப்பகம் ஒன்றில் தங்கிப் படித்த  ஒருவர், இன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில், கோடீஸ்வரர். இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ரெட்டி என்ற அவர், Key Software Solutions என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவர். இவர் குடும்பத்தில், சாப்பாட்டுக்கே வழி இல்லாததால், கருணை இல்லத்தில், ஒன்பதாவது வயதில் சேர்க்கப்பட்டார். அங்குத் தங்க இடமும், மூன்று வேளை சாப்பாடும் கிடைக்குமே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அம்மா இல்லை என்று, பொய் சொல்லித்தான் ஜோதி அங்கு தங்கினார். கிழிந்த ஆடைகள் அணிந்திருந்ததால் அவருக்குள் அது, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் மீறி, ஜோதி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்தார். படிக்கும்போதே தையல், சலவை, பாடம் கற்பித்தல் போன்றவற்றையும் அவர் பயின்றார். ஜோதிக்கு 16 வயது நிரம்பியபோது, திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், இவர், ஐந்து ரூபாய் தினக்கூலி வேலை செய்தார். இந்நிலையில் ஜோதி, இரு குழந்தைகளுக்கு தாயானார். தனது படிப்பை தொடர விரும்பிய ஜோதி, 1997ம் ஆண்டில் முதுகலைபட்டத்தையும் முடித்தார். அரசு ஆசிரியராக ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலையும் பார்த்தார் ஜோதி.

அந்த சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணக்காரராக வாழும் ஜோதியின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். அவரைப் பார்த்ததும் அமெரிக்காவுக்கு சென்று பணிபுரியும் கனவு ஜோதிக்கு ஏற்பட்டது. இதைச் செயல்படுத்த தொடங்கிய ஜோதி, அமெரிக்காவில் பணிபுரிய தேவையான கணினி இயலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டு, நண்பர் ஒருவர் வழியாக அமெரிக்கா சென்று, அங்கு வீடியோ கடை, குழந்தைகள் பராமரிப்பு என பல வேலைகளைச் செய்தார். பிறகு, அமெரிக்காவுக்கு விசா தேவைப்படுபவர்களுக்காக ஓர் ஆலோசனை நிறுவனம் தொடங்கலாம் என்று விரும்பினார். இதையடுத்து, பல வேலைகள் செய்து சேமித்து வைத்த நாற்பதாயிரம் டாலர்களை வைத்து, கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை இவர் தொடங்கினார். தொழிலைத் திறமையாகக் கற்றுக்கொண்டு, கடுமையாக உழைத்ததன் பயனாக, இன்று இவரது நிறுவனம், ஆண்டுக்கு 15 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தொழில் செய்கிறது. அந்நிறுவனத்தில் 100 பேர் பணிபுரிகிறார்கள்.

வாசித்ததில் பிடித்ததை உங்களோடு இப்போது பகிர்ந்துகொள்கிறோம்.

தங்கம் விலை அதிகம்தான், தகரம் மலிவுதான், ஆனால் தகரத்தைக் கொண்டுச் செய்யவேண்டியதை தங்கம் கொண்டு செய்யமுடியாது. அதனால் தகரம் மட்டமில்லை. தங்கமும் உயர்ந்ததில்லை. கங்கை நீர் புனிதம்தான். அதனால் கிணற்று நீர் வீண் என்று

அர்த்தமில்லை. தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன? கிணறாயிருந்தால் என்ன? காகம் மயில்போல் அழகில்லைதான். ஆனாலும், படையல் என்னவோ காக்கைக்குத்தான்! நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லைதான். ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத்தான்! பட்டுபோல் பருத்தி இல்லைதான். ஆனாலும் வெயிலுக்குச் சுகமென்னவோ பருத்திதான்! ஆகாயம்போல் பூமி இல்லைதான். ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான்! நேற்றுபோல் இன்றில்லை. இன்றுபோல் நாளையில்லை. அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான்! எனவே நீ, நீயாக இரு! அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை! உன்னைச் சரி செய்துகொண்டே வா. நீ நீயாக இரு! உலகம் ஒரு நாள், உன்னைப் போல் வாழ ஆசைப்படும்! உன்னைப் பாடமாக ஏற்கும்.

உயரிய நிலையில் உள்ளவர்கள், நன்மையை மட்டுமே செய்பவர்களாக, எந்நிலையிலும் இவ்வாறு வாழ்ந்தவர்களே.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.