சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ உரைகள்

வறுமை ஒழிப்பில் சமயத் தலைவர்களின் உதவி

அசிசி பல்சமயக் கூட்டத்தில் தலைவர்கள் - ANSA

18/07/2017 15:07

ஜூலை,18,2017. நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உண்மையான வளர்ச்சிப் பாதையில்  உலகம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பது, சிறந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் உருவாக்கப்படுவதில் வெளிப்பட வேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

உலகில் வறுமையை ஒழித்து, அமைதியை ஊக்குவிப்பதில், சமயக் குழுக்களின் பொறுப்பு என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் இத்திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் பணியாற்றும், திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகில் வறுமையை ஒழித்து, அமைதியை ஊக்குவிப்பதில், சமயக் குழுக்களின் ஒருமைப்பாடு ஏன் தேவை என்பது குறித்து பேச விரும்புவதாகத் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், இப்பூமி என்ற நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதன் வழியாக, அனைத்து மக்களும் உண்மையாகவே பலன்பெற, ஐ.நா.வின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள், கருவிகளாக உள்ளன என்று கூறினார்.

சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்களோ அல்லது, சமூக அறிவியலாளர்களோ அல்ல என்றும், அத்தகைய தலைவர்களாக, அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்ள இயலாது என்றும் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், வளர்ச்சித் திட்டங்களில், உலகத் தலைவர்கள் செயலில் இறங்க, சமயத் தலைவர்கள், தங்களின் ஆன்மீக மற்றும் அறநெறிக் கடமைகள் வழியாகத் தூண்ட இயலும் என்றும் தெரிவித்தார்.

மனித வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, நலிந்தவரும், ஒடுக்கப்பட்டவரும் மேம்படவும், பொருளாதார மற்றும், அரசியல் இலாபங்களுக்காக, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கு மக்களுக்கு உதவவும் சமயத் தலைவர்கள் பணியாற்றுகின்றனர் எனவும், ஐ.நா.வில் உரையாற்றினார், பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/07/2017 15:07