2017-07-18 15:25:00

இந்தியாவில் காழ்ப்புணர்வு களையப்பட சமயத் தலைவர்கள்


ஜூலை,18,2017. இந்தியாவில், அண்மை வாரங்களில் சமய சகிப்பற்றதன்மை, காழ்ப்புணர்வு, மற்றும் வன்முறைக்கு பலர் பலியாகியுள்ளவேளை, இத்தகைய வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு, நாட்டின் பல்சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புது டெல்லியில், ஜூலை 16, இஞ்ஞாயிறன்று கூடிய, ஏறத்தாழ நாற்பது, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள், நாட்டின் தற்போதைய நிலை குறித்த கவலையை வெளியிட்டு, மத்திய அரசிடம் இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் நடத்தப்பட்ட இக்கூட்டம் பற்றி, UCA செய்தியிடம் பேசிய, அப்பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், நாட்டின் பாரம்பரிய அமைதியும், நல்லிணக்கமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக, சமயத் தலைவர்கள் உணர்ந்தனர் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், பல்வேறு மதங்களைச் சார்ந்த தலைவர்களும், அறிவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசை விண்ணப்பித்துள்ளனர்.

2017ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பசுக்கள் பாதுகாப்பு அல்லது பசுக் கொலைகளுக்கு எதிராக, இருபது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 2016ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வெண்ணிக்கை 75 விழுக்காட்டுக்கும் அதிகம் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.