2017-07-18 14:51:00

திருத்தந்தையோடு ஒத்துழைப்பவராக இரஷ்யாவில் பயணம்


ஜூலை,18,2017. புரிந்துகொள்தல் மற்றும், உரையாடல் வழியாக, வளர்ச்சிக்கு உதவும் பாலங்களைக் கட்ட விரும்பும் ஒருவரின் ஒத்துழைப்பாளராக, இரஷ்யாவுக்குத் தான் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

‘பிரான்சிஸ், உரையாடலின் திருத்தந்தை’ என்ற தலைப்பில், Rai Vaticano என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையோடு ஒத்துழைப்பவர் என்ற முறையில், வருகிற ஆகஸ்டில் இரஷ்யாவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார்.

இப்பயணத்தில் இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்களையும் சந்தித்துப் பேசவுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், தூய ஆவியாரால் வழிநடத்தப்பட தன்னை முழுவதும் கையளிப்பதாகவும் கூறினார்.

திருப்பீடத்தின் தூதரகப் பணிகள் பற்றியும் பேசிய கர்தினால், உலகின் இன்றையச் சூழலில், அமைதி, நீதி மற்றும் வளர்ச்சிப் பணிகளில், திருப்பீடம் பணியாற்ற வேண்டுமென திருத்தந்தை விரும்புகின்றார் என்றும் தெரிவித்தார்.

புறக்கணிப்புச் சுவர்களைத் தகர்த்தெறிந்து, சந்திப்பு மற்றும், ஒப்புரவின் புதிய தளங்களை உருவாக்குவதற்கும், இதனை, பொருளாதார மற்றும், ஆன்மீக வறுமைச் சூழல்களிலிருந்து தொடங்குவதற்கும், திருத்தந்தை விரும்புகின்றார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் பேட்டியில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.