2017-07-18 15:21:00

மத்திய ஆப்ரிக்காவில் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் அழைப்பு


ஜூலை,18,2017. போரால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்கப் பகுதியில், அமைதிக்கும், ஒப்புரவுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர், அப்பகுதி ஆயர்கள்.

காமரூன் நாட்டின் யவுந்தே நகரில், ஜூலை 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை, 11வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அப்பகுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர்.

அச்சத்தையும் மரணத்தையும் விதைப்பவர்கள், வன்முறையைக் கைவிட்டு, அமைதி, உரையாடல் மற்றும் ஒப்புரவு பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், ஆயர் Jean Marie Benoit Bala அவர்கள், கடந்த ஜூன் 2ம் தேதி, காமரூனில் கொடூரமாய்க் கொல்லப்பட்டது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சாட், காபோன், காமரூன், ஈக்குவிட்டோரியல் கினி, காங்கோ பிரஸ்ஸாவிலே ஆகிய நாடுகளின் ஆயர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.