2017-07-19 16:58:00

ஆப்ரிக்காவில் குழந்தைகள் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா


ஜூலை,19,2017. உரோம் நகரில் இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனையின் ஆதரவோடு, மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகர் பாங்கியில் எழுப்பப்படவிருக்கும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு, இச்செவ்வாயன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை, பாங்கி பேராலயத்தில், 2015ம் ஆண்டு, நவம்பர் மாதம் துவக்கி வைத்தபின், இரக்கத்தின் ஒரு தெளிவான வெளி அடையாளமாக, மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

திருத்தந்தையின் அழைப்பிற்கிணங்க, உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனை, ஆப்ரிக்காவில், ஊட்டச்சத்து குறைவால் துன்புறும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், பாங்கியில் மருத்துவமனை ஒன்றை அமைக்க தீர்மானித்தது.

இந்த மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மத்திய ஆப்ரிக்க குடியரசின் அரசுத்தலைவர், Faustin-Archange Touadera அவர்களும், குழந்தை இயேசு மருத்துவ மனையின் இயக்குனர், மாரியெல்லா எனோக் (Mariella Enoc) அவர்களும், மற்றும் தலத்திருஅவை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.