2017-07-19 14:52:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம் பாகம் 2


ஜூலை,19,2017. தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகம், உரோமைப் பேரரசில் நிலவிவந்த பல்வேறு சமயக் குழுக்களில் ஒன்றாக விளங்கியது. இருந்தபோதிலும், சில உரோமைப் பேரரசர்கள், கிறிஸ்தவர்களைச் சந்தேகக் கண்கொண்டே நோக்கினர். கிறிஸ்தவர்கள், பேரரசர்களைக் கடவுளாக அறிவித்து வணங்கவும், உரோமைக் கடவுள்களுக்கு வழிபாடு செய்யவும் மறுத்ததே இதற்குக் காரணம். இதனால், கிறிஸ்தவர்கள் நூற்றாண்டுகளாக கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்கள் போன்ற கொடிய விலங்குகளுக்கு உணவாகப் போடப்பட்டனர், உயிரோடு எரித்தும், சிலுவையில் அறையப்பட்டும் கொல்லப்பட்டனர். பேரரசர் தியோக்ளேசியன் காலத்தில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், கிறிஸ்தவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன மற்றும், மறைநூல்கள் எரிக்கப்பட்டன.  ஆயினும், உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை ஆட்சி செய்த முதலாம் கான்ஸ்டன்டைனும், கிழக்குப் பகுதியை ஆட்சிசெய்த லிசினியுசும், கி.பி.313ம் ஆண்டில், வட இத்தாலியிலுள்ள மிலான் நகரில், மகிழ்வான ஒரு சூழலில் சந்தித்து, அரசாணை ஒன்றில் கையெழுத்திட்டனர். இதன் வழியாக, உரோமைப் பேரரசில் பல ஆண்டுகளாக நிலவிவந்த அதிகாரப் போட்டி முடிந்து, உரோமை உலகம், அமைதியை அனுபவிக்கத் தொடங்கியது. கி.பி.303, கி.பி.304ம் ஆண்டுகளில், உரோமைப் பேரரசர்கள் தியோக்ளேசியன், கலேரியுஸ் ஆகிய இருவராலும் மிகக் கொடுமையாகத் தொடங்கப்பட்ட கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளிலிருந்து, கிறிஸ்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மிலான் அரசாணை என அழைக்கப்படும் இந்தப் புகழ்பெற்ற அரசாணைக்குப்பின், கிறிஸ்தவம் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட மதமாக மாறியது. இது சமய சகிப்புத்தன்மைக்கு வித்திட்டது. கிறிஸ்தவர்கள், சமய சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க ஆரம்பித்தனர். பெரும்பாலான உரோமைக் குடிமக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவத் தொடங்கினர். கிறிஸ்தவ மறைசாட்சிகளின் காலம் முடிவுக்கு வந்தது. உரோமைப் பேரரசு, கிறிஸ்தவப் பேரரசாக மாறத் தொடங்கியது.   

பெரிய கான்ஸ்டன்டைன் (Constantine the Great) எனவும் அழைக்கப்படும் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளில் புனிதராகவும் போற்றப்படுகிறார். இவர், இராணுவ அதிகாரியான Flavius Constantiusக்கும், அவரது மனைவி Helenaவுக்கும், கி.பி. 272 அல்லது 273ம் ஆண்டு, பிப்ரவரி 27ம் தேதியன்று பிறந்தார். இவர், தன் தந்தையின் இறப்புக்குப் பின்னர், வீரமுள்ள இராணுவ வீரராகவே தன்னை வெளிப்படுத்தினார். பிரித்தானியாவில் நடைபெற்ற போரின் வெற்றியைத் தொடர்ந்து, கான்ஸ்டன்டைன், மேற்கில், புதிய அகுஸ்துசாக, அதாவது அடுத்த உரோமைப் பேரரசராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவேளை, Galerius, Maxentius ஆகிய இருவரும் அந்த அறிவிப்பை ஏற்கவில்லை. கி.பி.305ல் கலேரியுசும், கி.பி.307ல் Maxentiusம் தங்களை அகுஸ்துசாக அறிவித்தனர். ஆயினும், கான்ஸ்டன்டைனை மக்கள் பலர் ஏற்றனர். போரில் வல்லவராகத் திகழ்ந்த கான்ஸ்டன்டைன், பாலஸ்தீனம், ஆசியா மைனர் முதல், பிரிட்டன், இஸ்பெயின் என, உரோமைப் பேரரசு முழுவதும் சுற்றி வந்தவர். இவர் ஒருமுறை ஆல்பஸ் மலையை, தனது படைகளோடு கடந்து செல்கையில் ஒரு கனவு கண்டார். அதில், சூரியனின் முன், சிலுவை வடிவத்தில் ஒளிக்கற்றை ஒன்று கடந்து செல்வதையும், அதில், நீ வெற்றியடைவாய் என எழுதப்பட்டிருந்த வார்த்தைகளையும் கண்டார். இந்தக் கனவு கண்டபின், இவர் தனது எதிரியான Maxentiusஐ, உரோம் நகரின் டைபர் நதியிலுள்ள மில்வியன் பாலத்தில் தோற்கடித்தார். இது நடந்தது கி.பி. 312ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி. இதைத் தொடர்ந்து கான்ஸ்டன்டைன், அடுத்த உரோமைப் பேரரசராகவும் ஆட்சியில் அமர்ந்தார்.

கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் அளித்திருந்தபோதிலும், இவர் தன் முன்னோர்களைப் போலவே, இளமைக் காலத்திலிருந்தே உரோமைக் கடவுள்களை, சிறப்பாக, உரோமையரின் சூரியக் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். பேரரசர்கள் அகுஸ்துஸ், நீரோ ஆகிய இருவரும், தங்கள் பேரரசை விளம்பரப்படுத்துவதற்கு, சூரியக் கடவுள் அடையாளத்தையே அதிகம் பயன்படுத்தினர் என்பதிலிருந்து, சூரியக் கடவுள் இப்பேரரசில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியலாம். கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவத்திற்கு சட்டப்படி அங்கீகாரம் அளித்திருந்தாலும், அதற்கு 25 ஆண்டுகள் சென்று, மரணப்படுக்கையிலே திருமுழுக்குப் பெற்றார் எனச் சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். இவரது மனைவியும், மூத்த மகனும் கொல்லப்பட்டதும் இந்தத் தாமதத்திற்குக் கராணமாக, சிலர் சொல்கின்றனர். பேரரசர் கான்ஸ்டன்டைன், கி.பி. 306ம் ஆண்டு முதல், கி.பி.337ம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். இந்த ஆட்சி காலத்தில், இவரும் சூரியக் கடவுளையே தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளார். சூரியக் கடவுள் வழிபாடு மீது இவருக்கிருந்த பக்தியால், வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறுக்கிழமையை, தனது பேரரசில் ஓய்வு நாளாக மாற்றினார். இவர் தனது பேரரசில், கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வ மதமாக அமைத்திருந்தாலும், அவரது நாணயங்களில், சூரியன், செவ்வாய் போன்ற கடவுள்களின் உருவங்கள் காணப்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும், அந்நியக் கடவுளுக்குப் பலிகள் கொடுக்கப்படுவதை, இவர் தடைசெய்தார். கோவில் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். கிறிஸ்தவர்கள் வெறுத்த, இரத்தம் சிந்தும் குத்துச் சண்டை கேளிக்கை விளையாட்டுக்களையும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிலுவையில் அறையப்படுவதையும் தடை செய்தார். பாலியல் முறைகேடான வாழ்வுக்கும், விபச்சார வழிபாடுகளுக்கும் எதிராகச் சட்டங்களை இயற்றினார்.

பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் நிலவிய கிறிஸ்தவம், திருத்தூதர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததைவிட வித்தியாசமாக இருந்தது. யூதர்கள் மீதும், அவர்களின் சமய வழிபாடுகள்மீதும் இவர் கொண்டிருந்த சுயவெறுப்பால், பழைய ஏற்பாட்டில் வரும் பாஸ்கா விழா நாளை, இயேசுவின் உயிர்ப்பு விழாவுக்கு மாற்றினார். பக்தியுள்ள கிறிஸ்தவரான இவரது அன்னை ஹெலேனாவை, புனித பூமிக்கு அனுப்பி ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதித்தார். இவர் காலத்தில் கிறிஸ்தவத்தில் உட்பூசலும் நிலவியது. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், கிறிஸ்தவ விசுவாசத்தைப் பாதை மாறச் செய்யும் அளவுக்கு, இறையியல் முரண்பாடுகள் அச்சுறுத்தி வந்தன. ஆரியத் தப்பறைக் கொள்கை பரவியது. இறைமகனுக்குத் தொடக்கம் இருந்தது. அவர் படைக்கப்பட்ட உயிர் என, ஆரியுஸ் (Arius), என்பவர், போதிக்கத் தொடங்கினார். இவரின் இப்போதனை, கிறிஸ்தவத் திருஅவையில் பிளவு ஏற்படும்படியாக அச்சுறுத்தியது. இது, உரோமைப் பேரரசின் ஒற்றுமைக்கும் ஆபத்தாக இருந்தது. பேரரசின் ஒற்றுமை பற்றிக் கவலையடைந்த பேரரசர் கான்ஸ்டன்டைன், அலெக்சாந்திரியா ஆயருக்கும், ஆரியுசுக்கும் கடிதங்கள் அனுப்பி, இவர்கள் இருவரும் முரண்பாடுகளைக் களைந்து, ஒருவரையொருவர் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். இம்முயற்சி தோல்வியடையவே, திருஅவை முழுவதற்கும் ஒரு பொதுச் சங்கத்தைக் கூட்டினார்  இதற்குமுன், மாநில வாரியாக, தலவாரியாக நடைபெற்றுவந்த பொதுச் சங்கங்கள், முதன்முறையாக, உலகளவில் எல்லா ஆயர்களும் கூடும், வரலாற்று சிறப்புமிக்க பொதுச் சங்கமாக அமைந்தது. உரோமைப் பேரரசின் கடைகோடியிலிருந்தெல்லாம் பயணம் செய்யும் ஆயர்களைக் கருத்தில் கொண்டு, பயணச் செலவுகளையும், பேரரசரே ஏற்றார். இப்பொதுச் சங்கத்தில், ஆரிய தப்பறைக் கொள்கையை முறியடிக்கும் விதமாக, திருமுழுக்கு விசுவாச அறிக்கையில், அதே இயல்பில் என்ற வார்த்தையை, ஆயர்கள், இணைத்தனர். தந்தையாம் இறைவன் போன்றே கிறிஸ்துவும் இயல்பைக் கொண்டுள்ளார் எனச் சொல்லி, கிறிஸ்துவின் இறைத்தன்மையை உறுதி செய்தனர். ஆரியுசு உட்பட மூன்று பேரைத் தவிர, இப்பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட முன்னூறு பேரும், இதற்கு இசைவு தெரிவித்தனர்.  

நீசே நகரில் நடைபெற்ற இப்பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட ஆயர்களில் பெரும்பாலானோர், தியோக்ளேசியன் அடக்குமுறையிலிருந்து தப்பித்து உயிர்வாழ்ந்தவர்கள். எனவே இவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தி வழியில் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தனர். பேரரசர் கான்ஸ்ட்டைன், கிறிஸ்தவத்தை, தனிப்பட்ட பிரிவு என்பதிலிருந்து, முழு சமுதாயத்தையும் உள்ளடக்கிய ஒரு நெறியாக மாற்றினார். இவர், கிறிஸ்தவத்தின் நிறுவன அமைப்புமுறைக்கு அடித்தளம் இட்டார் எனக் கூறலாம். ஞாயிறு வழிபாட்டை, சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினார். பைசாண்டினும் என்ற  கிராமத்தை, கான்ஸ்டான்டிநோபிள் நகரமாக மாற்றினார். புதிய உரோமை நகரம் என அழைக்கப்பட்ட இந்நகரம், உரோமைப் பேரரசின் புதிய தலைநகரமாக மாறியது. மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக மையமாகவும் இது மாறியது. கி.பி.337ம் ஆண்டில் இவர் இறக்கும் காலத்தில், அந்நியக் கடவுள் வழிபாட்டை முடக்குவதில் வெற்றி கண்டார். Germanic, Sarmatian போன்ற மூர்க்கத்தனமான இனங்களை, குறிப்பாக, பழங்குடி மக்களை மனம் மாற்றுவதில் வெற்றியும் கண்டார். இவர் புதிது புதிதாக கைப்பற்றிய பகுதிகளில், இவர் விடுத்த நிபந்தனைகளில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதும் ஒன்றாக இருந்தது. இவர் கிறிஸ்தவத்தின்மீது காட்டிய ஆர்வத்தால், பெர்சியப் பேரரசிலும் கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஆர்வம் காட்டினார். பின்னாளில், பைசான்டைன் பேரரசர்கள், கிறிஸ்தவ விசுவாசத்தைப் பாதுகாப்பதில், பேரரசர் கான்ஸ்டன்டைனை எடுத்துக்காட்டாகக் கொண்டிருந்தனர். முதல் கிறிஸ்தவப் பேரரசர் என்ற முறையில், உலகை மாற்றியவராக இவர் நோக்கப்படுகிறார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.