2017-07-19 15:42:00

பாசமுள்ள பார்வையில்... – கிளை வழியே நிறைவேறிய ஆணிவேரின் ஆசை


அவர், அந்த கிராமத்தின் மருத்துவ முகாமுக்கு புதிதாக வந்த மருத்துவர். எந்தச் சிரமச் சூழலிலும்,  புன்னகை மாறாமலேயே பணிவிடை செய்து வந்தார்.  அவரை யாரும் வெறும் மருத்துவராகப் பார்ப்பதில்லை.  மாலையானால் மரத்தடியில் அமர்ந்துகொண்டு, அந்த ஊர் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், பாடங்களைப் படிக்க உதவிக்கொண்டும் இருப்பார். “30 வயது கூட நிரம்பாத இந்த இளைஞர், தன் முழுநேரத்தையும் இந்த கிராமத்தின் மக்களுக்காக ஏன் செலவிடவேண்டும்? இதுவரை வந்து சென்ற மருத்துவர்கள்போல், ஒரு 8 மணிநேரம் மருத்துவமனையில் பணியாற்றியபின், மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி வரலாமே” என அடிக்கடி நினைத்துக் கொள்வார், 70 வயது நிறைந்த வேதமூர்த்தி. அன்று இந்த விடயம் குறித்து தன் மனைவியிடம் பேசினார், வேதமூர்த்தி. “உங்களுக்கு விடயமே தெரியாதா. அந்தப் பிள்ளையாண்டான், நம்ம கீழத்தெருவில் வசித்தாரே மலைச்சாமி, அதுதான், 40 ஆண்டுகளுக்கு முன் பக்கத்துத்தெரு மேல்சாதி பையனுடன் தன் மகள் ஓடிப்போனதும், ஊர்ப்பேச்சு தாங்காமல்,  தூக்குப்போட்டு இறந்துபோனாரே, அந்த மலைச்சாமியின் பேரனாம். 30 வருடங்களுக்கு முன், இவன் அப்பா இறந்த பிறகு, இந்த ஊருக்கு திரும்பிவர, அவன் அம்மா ஆசைப்பட்டாராம். ஆனால், அத்தாய் இறக்கும்வரை அது நிறைவேறவேயில்லையாம். இந்த ஊரை நினைத்தே வாழ்ந்த அவன் தாயின் விருப்பதை நிறைவேற்றவே, இந்த ஊருக்கு மாற்றல் கேட்டு வந்தானாம் இந்த பையன்” என்று அவர் மனைவி சொன்னதும் வாயடைத்துப்போனார் வேதமூர்த்தி. வாழ்வதற்காக இந்த ஊரைவிட்டு ஓடிய தன் தாயை, இங்கு வாழவைப்பதற்காக, ஆணிவேரைத் தேடி வந்த கிளையாக, அந்த இளம் மருத்துவரைப் பார்த்தார், வேதமூர்த்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.