2017-07-19 16:01:00

"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக செபிப்போம்"


ஜூலை,19,2017. குற்றங்களைத் திட்டமிட்டு நடத்திவரும் அமைப்புக்களான 'மாஃபியா' கும்பல்களால் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் வண்ணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 19, இப்புதனன்று ஒரு டுவிட்டர் செய்தியை, இத்தாலிய மொழியில் மட்டும் வெளியிட்டுள்ளார்.

"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக நாம் செபிப்போம், ஊழலுக்கு எதிராக போராட்டங்களைத் தொடர்வதற்குத் தேவையான சக்தியைக் கேட்போம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளிவந்துள்ளன.

இத்தாலியில், மாஃபியா கும்பல்களுக்கு எதிராகப் போராடிவந்த பவோலோ போர்செல்லினோ (Paolo Borsellino) என்ற நீதிபதி, மாஃபியா கும்பலின் வெடிகுண்டு தாக்குதலால், 1992ம் ஆண்டு, ஜூலை 19ம் தேதி கொல்லப்பட்டார்.

1992ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி, ஞாயிறன்று, நீதிபதி போர்செல்லினோ அவர்கள், தன் அன்னையைச் சந்திக்கச் சென்ற வேளையில், அவரது அன்னை வாழ்ந்துவந்த இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிறைக்கப்பட்டிருந்த ஒரு கார், நீதிபதி அங்கு சென்று சேர்ந்ததும் வெடித்ததால், அவரும், உடன்  சென்ற ஆறு பேரில், ஐவரும் கொல்லப்பட்டனர்.

நீதிபதி போர்செல்லினோ அவர்களுக்கு, அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்த இத்தாலிய அரசு முன்வந்தபோதிலும், அதனை மறுத்து, அவரது குடும்பத்தினர், தனிப்பட்ட முறையில் நடத்திய அடக்கத் திருப்பலியில், 10,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அவரது மரணத்தின் 25ம் ஆண்டு நிறைவேறிய இப்புதனன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, மாஃபியா கும்பல்களுக்கும், ஊழலுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.