சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

இந்திய புதிய குடியரசுத்தலைவரிடம் ஆயர்களின் எதிர்பார்ப்பு

இந்திய புதிய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், அவரது மனைவி கவிதா கோவிந்த் - EPA

21/07/2017 15:19

ஜூலை,21,2017. இந்தியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத்தலைவரை வரவேற்றுள்ள அதேவேளை, நாட்டை அமைதி, வளர்ச்சி மற்றும் நீதியின் பாதையில், அவர் வழிநடத்திச் செல்வார் என்று, தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ராம் நாத் கோவிந்த் அவர்கள், மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும், அனைவருக்கும் தொண்டாற்றுபவராகவும், தன்னை அர்ப்பணிப்பார் என்றும் கூறியுள்ளனர், ஆயர்கள்.

புதிய குடியரசுத்தலைவர் நாட்டு மக்கள் எல்லாரையும், அமைதி, வளர்ச்சி மற்றும் நீதியின் பாதையில் நடத்திச் செல்வதற்கு, இறைவன் அவருக்கு நல்வாழ்வையும், ஞானத்தையும், சக்தியையும் அருளவேண்டுமென்று செபிப்பதாகவும், ஆயர்கள், தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.

புதிய குடியரசுத்தலைவருக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர்களின் வாழ்த்தைத் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர், தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், சிறுபான்மை சமயத்தவர், அரசியல் அமைப்பின்படி நடத்தப்படுவதற்கு, புதிய குடியரசுத்தலைவர் ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.

71 வயது நிரம்பிய ராம் நாத் கோவிந்த் அவர்கள், இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக, ஜூலை 19, இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டார். ஜூலை 25, வருகிற செவ்வாயன்று அவர் பதவியேற்பார்.

உத்தரபிரதேசம் கான்பூர் தேஹத் மாவட்டம், பராவுன்க் கிராமத்தில் 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ராம் நாத் கோவிந்த் அவர்கள், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளவர் மற்றும், வழக்கறிஞருமாவார். இவர், டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர், 1980ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுவரை, மத்திய அரசின் வழக்கறிஞராகவும் இருந்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

21/07/2017 15:19