2017-07-21 15:39:00

உரிமை மீறல்களுக்குப் பலியானவர்களுக்குப் புகலிடம் அளிக்க...


ஜூலை,21,2017. பிலிப்பீன்சில், மனித உரிமை மீறல்களுக்குப் பலியான மக்களுக்கு, புகலிடம் அளிப்பதற்கு, அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் தீர்மானித்துள்ளன என UCA செய்தி கூறுகின்றது.

மிந்தனாவோ தீவில், அமலில் இருக்கின்ற இராணுவச் சட்டத்தை, வருகிற டிசம்பர்வரை நீட்டிக்க வேண்டுமென, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் காங்கிரஸ் அவையைக் கேட்டுக்கொண்டுள்ளதை முன்னிட்டு, அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகளின் அவை, இவ்வாறு தீர்மானித்துள்ளது.

மனித உரிமை மீறல்களுக்குப் பலியான மக்களுக்குப் புகலிடம் அளிப்பதற்கு, தனது கிறிஸ்தவ சபை எப்போதும் தயாராக இருப்பதாக, பிலிப்பீன்ஸ் Independent கிறிஸ்தவ சபை ஆயர், Felixberto Calang அவர்கள் கூறினார்.

அநீதிகளையும், வன்முறையையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதை, கிறிஸ்தவ சபைகள் ஒருபோதும் நிறுத்தியதில்லை எனவும், பிலிப்பீன்சில் இடம்பெறும், போதைப்பொருள் தொடர்புடைய கொலைகளும், இராணுவச் சட்டமும், அமைதியை அல்ல, வன்முறையையே ஊக்குவிக்கும் எனவும், ஆயர், Calang அவர்கள், எச்சரித்தார்.

மராவி நகரில் நடந்த, பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 23ம் தேதி, மிந்தனாவோ தீவு முழுவதும், இராணுவச் சட்டத்தை அறிவித்தார், அரசுத்தலைவர் Duterte.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.