2017-07-21 15:27:00

எருசலேம் மலைக் கோவில் வன்முறைக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்


ஜூலை,21,2017. எருசலேமில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், யூதர்களின் புனித இடமாகப் போற்றப்படும், மலைக் கோவில் பகுதியில் கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், எருசலேம் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

Haram ash-Sharif எனவும் அழைக்கப்படும் எருசலேம் மலைக்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள வாயில்களில் ஒன்றில், காவலிலிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது, மூன்று அராபியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கோவில் வளாகத்திற்குள் செல்ல முயற்சித்தனர். இவ்வன்முறையில், இரு காவல்துறை அதிகாரிகளும், வன்முறையாளர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை குறித்து, கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, எருசலேமின் 13 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், புனித பூமியில், புனித இடங்கள் பாதுகாக்கப்படுவது குறித்த, வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மீறப்படுமோ என்ற அச்சத்தைத் தெரிவித்துள்ளனர்.

புனித பூமியில், புனித இடங்களை நிர்வகிப்பது குறித்த ஒப்பந்தம், 18ம் நூற்றாண்டில் இடம்பெற்றது என்றும், இதற்கு அச்சுறுத்தலாக அமையும் எவ்வித நடவடிக்கையும், கடுமையான மற்றும், கற்பனைக்கெட்டாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அந்த அறிக்கை கூறுகின்றது.

செபம், தியானம், வழிபாடு ஆகியவற்றின் இடங்களாகிய புனித இடங்கள், ஆயுத மோதல்கள் இடம்பெறும் இடங்கள் இல்லையெனவும் கூறியுள்ள, எருசலேம் கிறிஸ்தவத் தலைவர்கள், புனித பூமியின் அமைதிக்காகவும் செபித்துள்ளனர்.

இதற்கிடையே, எருசலேம் மலைக்கோவில் மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.