2017-07-21 15:39:00

குடியேற்றதார, புலம்பெயர்ந்த சிறாரின் உரிமைகள் காக்கப்பட..


ஜூலை,21,2017. குடியேற்றதார மற்றும், புலம்பெயர்ந்த சிறார், அனைத்து விதமான உரிமை மீறல்களிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, அச்சிறாரின் சொந்த நாடுகளும், அவர்கள் கடந்துவரும் மற்றும், குடிபெயரும் நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, திருப்பீட அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

தென் இத்தாலியிலுள்ள Montepaone Lido என்ற இடத்தில் நடைபெற்ற, கோடை விடுமுறை பள்ளி 2017 (Summer School 2017) என்ற கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தவர் பிரிவின் நேரடிப் பொதுச் செயலர் அருள்பணி Fabio Baggio அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.  

குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தவரின் நல்வாழ்வு குறித்து, திருத்தந்தையர் 16ம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகிய இருவரும் விடுத்துள்ள விண்ணப்பங்களை மேற்கோள் காட்டிப் பேசிய, அருள்பணி Baggio அவர்கள், புலம்பெயர்ந்தவர் குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரைத்துள்ள மூன்று கூறுகள் குறித்தும் குறிப்பிட்டார்.

பாதுகாத்தல், ஒருங்கிணைத்தல், நீடித்த தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துதல் ஆகிய மூன்று கூறுகள் பற்றியும் உரையாற்றிய, அருள்பணி Baggio அவர்கள், குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களைவதற்கு, எல்லாத் தரப்பினரும் ஒருங்கிணைந்து சட்டங்களை இயற்றுமாறும் பரிந்துரைத்தார்.

உலகளாவிய மனிதம் மற்றும், நீதியை ஊக்குவிப்பதற்கென நடத்தப்படுகின்ற கோடை விடுமுறை பள்ளி, உரோம் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், Scalabrini துறவு சபையின் பன்னாட்டு குடியேற்றதாரர் நிறுவனம் (SIMI), முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு என்ற Scalabrini சபையின் அமைப்பு (ASCS) போன்றவற்றால் நடத்தப்படுகிறது.

ஜூலை 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்ற, கோடை விடுமுறை பள்ளி 2017 என்ற கூட்டம், குடியேற்றதார மற்றும், புலம்பெயர்ந்த சிறாரை மையப்படுத்தி நடத்தப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.