2017-07-21 09:45:00

குடியேற்றதாரர்களை மதிப்புடன் நடத்துவதில் சரிவு நிலை


ஜூலை,20,2017. நாடுவிட்டு நாடு செல்லும் குடியேற்றதாரர்களின் உழைப்பால், நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டாலும், குடியேற்றதாரர்களை மதிப்புடன் நடத்துவதில், சமுதாயம் சரிவு நிலையையே கண்டுள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவைக்கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும், பேராயர் இவான் யூர்கோவிச் அவர்கள், ‘குடியேற்றதாரர்களை சமுதாயத்தில் இணைத்தல்’ என்ற தலைப்பில், நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜூலை 19, இப்புதனன்று இவ்வாறு உரையாற்றினார்.

மலிவான சம்பளத்திற்கு உழைக்கும் குழுக்களாக மட்டுமே குடியேற்றதாரர்களை நோக்கும் வியாபாரக் கண்ணோட்டத்தை நீக்கி, மனிதர்கள் என்ற அடிப்படை மதிப்பை அவர்களுக்குத் தரவேண்டும் என்று திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்பதை, பேராயர் யூர்கோவிச் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு, பின்னர் தூக்கியெறியும் பொருள்களைப் போல குடியேற்றதாரர்களையும் கருதக்கூடாது என்று திருத்தந்தை கூறிவருவதை, பேராயர் யூர்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.