2017-07-21 15:44:00

சட்டத்திற்குப் புறம்பேயான கொலைகள் குறித்த விசாரணைக்கு ஆதரவு


ஜூலை,21,2017. மணிப்பூர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்து விசாரணகள் இடம்பெற வேண்டுமென, உச்ச நீதிமன்றம், மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதை வரவேற்றுள்ளார், அப்பகுதி கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

இரண்டாயிரமாம் ஆண்டுக்கும், 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இராணுவம், உபஇராணுவம் மற்றும், காவல்துறையினரால், 1,528 பேர், எவ்வித விசாரணையுமின்றி கொல்லப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளையொட்டி, இது குறித்த விசாரணையில், மத்திய புலனாய்வுப் பிரிவை ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை வரவேற்றுப் பேசியுள்ள, Imphal ஆயர் Dominic Lumon அவர்கள், இந்த விசாரணை, அரசியல் நோக்கங்கள் இன்றி, பாரபட்சமின்றி நடைபெறும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், தான் நம்புவதாக, UCA செய்தியிடம் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் கொலைகள் குறித்த, உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை, மனித உரிமைக் குழுக்களும் வரவேற்றுள்ளன.

வடகிழக்கு இந்தியாவில், போர் போன்ற சூழல் நிலவுவதால், அப்பகுதியின் ஏழு மாநிலங்களில், இராணுவம் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.    

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.