2017-07-21 09:55:00

"துயரும், அழுகையும் விலகி ஓட" அமெரிக்க ஆயரின் மடல்


ஜூலை,20,2017. குடியேற்றதாரர்களை, ஆபத்தான பூதங்களைப் போல், பயங்கரமான குற்றவாளிகளைப்போல் சித்திரிப்பதும், நாட்டின் எல்லைகளை, போர்காலத் தீவிரத்துடன் பாதுகாப்பதும் கண்டனத்திற்குரியவை என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர், தான் வெளியிட்டுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தின் எல் பாசோ மறைமாவட்டத்தின் ஆயர், மார்க் சீட்ஸ் (Mark Seitz) அவர்கள், "துயரும், அழுகையும் விலகி ஓட" என்ற தலைப்பில், ஜூலை 18, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில், குடியேற்றத்தாரருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கடுமையான முயற்சிகளைக் கண்டனம் செய்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், குடியேற்றதாரர்களை தடை செய்வது, எவ்வகையிலும் நாட்டை பாதுகாப்புடன் வைத்திருக்கப் போவதில்லை என்று கூறிய ஆயர் சீட்ஸ் அவர்கள், இறைவன் படைத்த உலகில், அனைவருக்கும் சமமான இட உரிமை உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆயர் சீட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இம்மடலில், அமெரிக்க அரசுத்தலைவர், அண்மையில் வெளியிட்டு வரும் சட்டங்களால் பிளவுபட்டுள்ள மக்களைக் குறித்து, எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கிடையே, எல் பாசோ மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கக் கோவில்களும், பள்ளிகளும், காவல்துறையினர், தகுந்த ஆணைகள் இன்றி நுழையமுடியாத இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.