2017-07-21 15:12:00

வெனிசுவேலா ஆலயத் தாக்குதலுக்கு கர்தினால் பரோலின் கண்டனம்


ஜூலை,21,2017. வெனிசுவேலா நாட்டில், ஓர் ஆலயத்திற்கு வெளியே குழுமியிருந்த மக்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

வெனிசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலஸ் மாதுரோ (Nicolas Maduro) அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ள இத்தாக்குதல் குறித்து, கவலை தெரிவித்து, அந்நாட்டுத் தலத்திருஅவைக்கு, தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், கர்தினால் பரோலின்.

கரகாஸ் பேராயர் கர்தினால், ஹோர்கே உரோசா சவினோ (Jorge Urosa Savino) அவர்களுக்கு, அனுப்பியுள்ள இச்செய்தியில், சுதந்திரம், ஒப்புரவு, மற்றும் நல்வாழ்வுக்காக, வெனிசுவேலா மக்கள் விடுக்கும் விண்ணப்பங்களுக்கு, மாதுரோ அரசு செவிமடுக்கும் என்ற, தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார், கர்தினால் பரோலின்.

ஜூலை 16, கடந்த ஞாயிறன்று, வெனிசுவேலா நாட்டின் எதிர் கட்சிகள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போதைய அரசு அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிரான கருத்துக்களை, அந்நாட்டின் 98.4 விழுக்காட்டு மக்கள் தெரிவித்தனர்

கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட கார்மேல் அன்னை திருநாளை, கர்தினால் சவினோ அவர்கள், கரகாஸ் நகருக்கு அருகேயுள்ள கார்மேல் அன்னை பங்குத்தளத்தில் சிறப்பிக்கச் சென்றிருந்த வேளையில், இந்த கருத்துக்கணிப்பு நடந்த இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக, இக்கோவிலும் தாக்கப்பட்டு, அங்கிருந்தோர் வெளியில் செல்லாமல் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறியுள்ளது.

வெனிசுவேலா நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான சூழலால், மருத்துவ உதவிகள் இன்றி, 2016ம் ஆண்டு, அந்நாட்டில் 11,000 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும், அங்குள்ள உணவு, மற்றும் மருந்துகள் பற்றாக்குறையைப் போக்க, இத்தாலிய ஆயர் பேரவை, அண்மையில் ஐந்து இலட்சம் யூரோக்கள் நிதி உதவி வழங்கியுள்ளது என்றும் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.