2017-07-22 15:39:00

கிழக்கு ஆப்ரிக்க மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி


ஜூலை,22,2017. கடும் வறட்சி மற்றும், உணவுப் பாதுகாப்பின்மையால் துன்புறும் கிழக்கு ஆப்ரிக்க மக்களுக்கு, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 25 ஆயிரம் யூரோக்களை வழங்கியுள்ளார்.

ஜூலை 3ம் தேதி, FAO நிறுவனத்தின் கருத்தரங்கிற்கு, அனுப்பிய செய்தியில், பசியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்கு, அரசுகளை ஊக்குவிக்கும் விதமாக, தான் தூண்டுகோலாக இருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதை நிறைவேற்றுவதன் அடையாளமாக, இந்நிதியுதவியை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வுதவி குறித்து, FAO நிறுவனத்தில், திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும், பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள், அந்நிறுவனத்தின் இயக்குனர், José Graziano da Silva அவர்களுக்கு, எழுதியுள்ள கடிதத்தில் அறிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்காவில், ஆயுத மோதல்கள் மற்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் கிராமங்களில், வேளாண்மைக்கு உதவும் FAO நிறுவனத்தின் திட்டத்திற்கென, இந்நிதியுதவியை திருத்தந்தை வழங்கியுள்ளார் என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொமாலியா, எத்தியோப்பியா, கென்யா, டான்சானியா, உகாண்டா ஆகிய ஐந்து கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில், இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள், கடும் பசிக்கொடுமையை அனுபவிக்கின்றனர். இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டின் இறுதியில் இருந்ததைவிட, ஏறக்குறைய முப்பது விழுக்காடு அதிகம் என, FAO நிறுவனம் கூறியுள்ளது. 

தென் சூடானிலும், ஏறத்தாழ அறுபது இலட்சம் மக்கள், மிகக் கடுமையான பசிக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர் என, அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.