2017-07-22 15:49:00

பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டியும், இயேசுசபை அருள்பணியாளருமான, Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை இது:

குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள், சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை, தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று, சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

உண்மைக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதைகளே என்று, இயேசு உணர்ந்திருந்தார். எனவே, அவர், இறைவனையும், இறையரசையும் அறிமுகம் செய்வதற்கு உவமைகளைப் பயன்படுத்தினார். சென்ற ஞாயிறு, 'விதைப்பவர் உவமை'யை வழங்கிய இயேசு, இந்த ஞாயிறு, மூன்று உவமைகளை வழங்குகிறார். வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என்ற இந்த மூன்று உவமைகளும், விண்ணரசின் பண்புகளை விளக்கும் உவமைகள் என்று இயேசு கூறியுள்ளார்.

விண்ணரசின் முக்கியப் பண்பான வளர்ச்சி பற்றி, இவ்வுவமைகள் வழியே, இயேசு சொல்லித்தருகிறார். எந்த ஒரு வளர்ச்சியும், மின்னலைப்போல் தோன்றி மறைவது இல்லை; உண்மையான வளர்ச்சி, பல தடைகளைத் தாண்டி, மெதுவாக, ஆனால், உறுதியாக, இறுதியாக வெளிப்படும்; அதைக் காண்பதற்கு, பொறுமை தேவை என்ற பாடங்களை இன்றைய மூன்று உவமைகளும் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. அனைத்திற்கும், உடனுக்குடன் தீர்வுகள் காணவேண்டும் என்ற அவசரம் கொண்டிருக்கும் நமக்கு, இந்த அவசரத்தால், பயிரையும், களையையும், நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்துப்பார்க்கப் பொறுமையின்றித் தவிக்கும் நமக்கு, இன்றைய உவமைகள், 'வேகத் தடையை'ப் (Speed breaker / speed bump) போல வந்து சேருகின்றன.

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், இருவர் விதைப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்:

மத்தேயு 13: 24-25

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்” என்று இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார்.

இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, விதை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவர், நம் கவனத்தை ஈர்க்கின்றார், நமக்குள் நெருடல்களை உருவாக்குகின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகளும் வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவர், இன்றைய உலகில், திட்டமிட்டு தீமைகளை வளர்ப்போரை நினைவுபடுத்துகிறார். தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.

எடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்கள் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் களைகளை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம்.

இறையரசின் வளர்ச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுபோல், இறையரசிற்கு தடையாக வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதிலும் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் முதல் உவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்” என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.

களைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், காவல்துறையும், நீதித்துறையும் காட்டிவருகின்றன. களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், இத்துறைகள் காட்டியுள்ள வேகமும், அவசரமும், பல அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, நாம் அடிக்கடி கேட்கும் செய்திதானே!

இவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, பயிரா, களையா என்பதை அறியும் பொறுமையின்றி செயலாற்றிய காவல் மற்றும் நீதித்துறைகளைப் பற்றியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கான்சாஸ் நகரில், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஓர் இளைஞர், 17 ஆண்டுகள் சென்று, குற்றமற்றவர் என்று, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்டார்.

ரிச்சர்ட் அந்தனி ஜோன்ஸ் என்ற இவ்விளைஞர், 1999ம் ஆண்டு, பூங்கா ஒன்றில் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டதால், 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தக் கொள்ளை நடந்ததைக் கண்ட சிலர், அதைச் செய்தது ரிச்சர்ட்தான் என்று அடையாளப்படுத்தியதை வைத்து, நீதிபதியும், 'ஜூரி' என்றழைக்கப்படும் நடுவர் குழுவும் இணைந்து, ரிச்சர்டுக்குச் சிறைதண்டனை வழங்கினர். தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என்றும், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில், தான் மற்றோர் இடத்தில் இருந்ததாகவும், இளையவர் ரிச்சர்ட், பலமுறை எடுத்துச் சொல்லியும், பயனின்றி போனது.

அவர் சிறையில் 15 ஆண்டுகள் கழித்தபின், அச்சிறைக்கு வந்த வேறு சில கைதிகள், ரிச்சர்ட், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நண்பரைப்போலவே இருக்கிறார் என்று கூறினர். அந்த நண்பரின் பெயரும் 'ரிச்சர்ட்' என்பதை அவர்கள் கூறியதும், ரிச்சர்ட், தன் வழக்கறிஞர்கள் வழியே, இந்த ‘மற்றொரு ரிச்சர்ட்டை’க் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாவது ரிச்சர்டின் புகைப்படங்கள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருவரும், ஒரே தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருந்ததால், பூங்காவில் கொள்ளையடித்தவர் யார் என்பதை அடையாளப்படுத்தியவர்கள் தவறு செய்திருக்கலாம் என்று நீதிமன்றம் உணர்ந்து, சிறையில் இருந்த ரிச்சர்ட் அவர்களுக்கு விடுதலை வழங்கியது. குற்றம் செய்த ஒருவரைப்போல இருந்த ஒரே காரணத்திற்காக, இளையவர் ரிச்சர்ட், தனக்கு விதிக்கப்பட்ட 19 ஆண்டுகள் தண்டனையில், 17 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.

தன் விடுதலையைத் தொடர்ந்து, இளையவர் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன: "ஒரே வகையான தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருப்பது, மிக, மிக அரிதான ஓர் ஒற்றுமை. இதைக் கொண்டு, முதலில், எனக்கு தண்டனையும், இப்போது, விடுதலையும் கிடைத்திருப்பது, அரியவகை அதிசயம் என்றே சொல்லவேண்டும். இதை நான், அதிர்ஷ்டம் என்று நம்பமாட்டேன். இது எனக்குக் கிடைத்த ஆசீர் என்றே நம்புகிறேன்" என்று ரிச்சர்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின்னரும், தனக்குக் கிடைத்த விடுதலை, வெறும் ‘அதிர்ஷ்டம்’ அல்ல, அது ஓர் 'ஆசீர்வாதம்' என்று கூறுமளவு பக்குவப்பட்டிருந்த இளையவர் ரிச்சர்ட் அவர்கள், சிறையில் இருந்த பல்வேறு களைகள் நடுவே ஒரு பயிராகவே வளர்ந்தார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. பயிரையும், களையையும் பிரித்துப்பார்க்கும் பொறுமையின்றி, அல்லது, பல வேளைகளில், களைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அப்பாவி மக்களை பழிவாங்கும் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும், இறைவன், பொறுமையையும், நேரிய சிந்தனையையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

பயிரையும், களைகளையும் பகுத்துப் பார்க்க நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம். அதேவண்ணம், கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை அறிவோம். ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில் சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும் காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, அந்த மாவு உள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பெற வாய்ப்பில்லை. பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றிய கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. உடனடி நூடுல்ஸ் (instant noodles), உடனடி தோசை, உடனடி இட்லி என்று, அனைத்திற்கும் 'ஆலாய்ப் பறக்க' ஆரம்பித்துவிட்டோம்.

அதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தால், நம் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் ஒரே நேரத்தில் பெற விழைகிறோம். நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் நம்மை வந்தடைவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. இதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன. நாமும், நம் பங்கிற்கு, அடுத்தவருக்கு இச்செய்திகளை அனுப்புவதன் வழியே, அவரது தொடர்புக் கருவிகள் என்ற நிலத்தில், இந்தக் களைகளை அவசரமாக விதைத்துவிடுகிறோம்.

நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டைும் வளர்கின்றன. கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம்.

‘செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. பாசம், பரிவு, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.

நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.