2017-07-24 15:14:00

பாசமுள்ள பார்வையில்.. அம்மாவின் விருப்பம்


வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த மகன், அன்று, தன் தாயோடு வங்கிக்குச் சென்றான். அங்கு வேலைகள் முடிய, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆனது. வீட்டிற்கு வந்தபின், மகன் தாயிடம், அம்மா, உங்கள் வங்கிக் கணக்கை, வலைத்தளம் வழியாக ஏன் இயக்கக் கூடாது? அவ்வாறு நீங்கள் செய்தால், இவ்வளவு நேரம் காத்திருக்கத் தேவையிருக்காதே! அம்மா, நீங்கள், கடைக்குச் சென்று சாமான்கள் வாங்குவதைக்கூட வலைத்தளம் வழியே செய்யலாம். அது உங்கள் வேலையை எளிதாக்கும்... இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி, வயதான அம்மாவை வலைத்தள உலகத்தில் அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருந்தான் மகன். மகனின் ஆர்வத்தைப் பார்த்த அம்மா சொன்னார் – மகனே, நீ சொல்வதுபடி செய்தால் நான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டியிருக்காதுதானே? என்று. ஆமாம். மளிகைக் கடைக்காரர்கூட, எல்லாப் பொருள்களையும் வீட்டு வாசலிலே கொண்டுவந்து இறக்கி விடுவார் என்றான் மகன். பின் அம்மா சொன்னவற்றைக் கேட்டு, அந்த மகன் வாயடைத்துப் போனான். இன்று நான் இந்த வங்கியில் நுழைந்த போது எனது நண்பர்கள் நான்கு பேரைச் சந்தித்தேன். நாங்கள், மகிழ்வாகப் பேசிக்கொண்டிருந்தோம். வங்கியில் வேலை செய்பவரும், எனக்கு நன்றாகப் பழக்கமாகிவிட்டார். நான் வீட்டில் தனியாக இருப்பதால், இந்த மாதிரி துணைகள் எனக்குத் தேவை. வங்கியில் வந்து பணம் எடுக்கவோ, பணம் போடவோ எனக்குப் போதுமான நேரம் இருக்கின்றது. இந்த மனித உறவுகள் எனக்குத் தேவை. சென்ற ஆண்டில் உன் அப்பா இறக்கும் நிலையில் இருந்தபோது, நான் பழங்கள் வாங்கும் கடைக்காரர் பார்க்க வந்தார். அப்பாவின் நிலையைப் பார்த்து, படுக்கையின் அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்தினார். சில நாள்களுக்குமுன் நான் சாலையில் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். என்னைப் பார்த்த மளிகைக்கடைக்காரர், ஒரு ஆட்டோவில் என்னை ஏற்றி, வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார். நீ சொல்வதுபோல் நான் செய்தால், இந்த அன்பான மனித உறவுகள் எனக்குக் கிடைக்குமா?

அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னார் - தொழில்நுட்பம், நம் மனித உறவுகளை விஞ்சும் நாளை எண்ணி அஞ்சுகிறேன். அந்நாளில், உலகம், முட்டாள்களின் தலைமுறையைக் கொண்டிருக்கும் என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.