2017-07-24 15:24:00

வாரம் ஓர் அலசல் – நான் செய்யாமல் வேறு யார் செய்வார்?


ஜூலை,24,2017. சென்னை மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சங்கரலிங்கனார் அவர்கள், விருதுநகர் தேசபந்து திடலில், 1956ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி, காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அவர் தனது உண்ணா நோன்பைக் கைவிடுமாறு, பல தலைவர்கள் கேட்டுக்கொண்டும், அவர் தம் குறிக்கோளில் உறுதியாக இருந்து, 76 நாள்கள் கடந்து, காலமானார். இவரின் இறப்புக்குபின், 1967ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில், சென்னை மாகாணம் என்ற பெயரை ‘தமிழ்நாடு’என்று மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு எனும் பெயர் சூட்டு விழா, 1968ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்தப் பெயர்மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்தப் பொன்விழா காலத்தில், தமிழ்நாட்டின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, பொருளாதார இறையாண்மை, கால்நடை சார்ந்த பொருளாதாரம், வாழ்வுரிமை, அரசியல் என, எல்லாம் எந்நிலையில் உள்ளன? சிந்திக்க வேண்டிய நேரம் இது. கி.மு.500க்கும் முன்பிருந்தே, சென்னைப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இருபதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமைவாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பு, கல்வெட்டுக்களிலும் இலக்கியத்திலும் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில், பத்துக்கும் மேற்பட்ட, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் உள்ளன. தமிழரின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல மதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், இயற்கை வளங்கள் என, தமிழ்நாடு சிறப்புகள் பலவற்றைக் கொண்டிருக்கின்றது.  ஆனால், இன்று தமிழகத்தில், கடும் வறட்சி. வந்தாரைக் கையேந்தவிடாமல் வாழவைக்கும் தலைநகரமாக விளங்கும் சென்னையில், தற்போது பதிமூன்று ஆண்டுகளுக்கு முந்தைய வறட்சி நிலவுகிறது. நீரின்றி அமையப்போகிறதா சென்னை? என்ற கேள்வி கடந்த வாரத்தில் எழுப்பப்பட்டது. அடுத்துவரும் தலைமுறை, தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இப்போதுள்ள இந்தத் தலைமுறையே தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை, தற்போது ஏற்பட்டுள்ளது.

பருவமழையின் ஏமாற்றத்தை அனுபவித்துவரும் தமிழ்நாடு, தற்போது, மத்திய அரசின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் திணறிப்போயுள்ளது. தமிழகத்தின் 31 விவசாய மாவட்டங்களில், மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாம். இந்நிலையில், சமூகநலன்  விரும்பும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே இப்ப்டியொரு கேள்வியைக் கேட்டுக்கொள்வது நல்லது. ‘நான் இல்லையென்றால் வேறு யார் செய்வார்... இப்போது செய்யவில்லையென்றால் இனி எப்போது செய்வது?’ என்பதே அக்கேள்வி.

கானடா நாட்டு வான்கூவர் நகரத்துக்குச் சென்ற, சாமர்த்தியமான இந்திய இளைஞன் ஒருவன், அங்குள்ள மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்குச் சென்று, முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி, அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம்வரை விற்கப்படும் பல்பொருள் அங்காடி அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி, "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது" எனக் கேட்டார். ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான் இளைஞன். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும் என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை டாலருக்கு விற்பனை செய்தாய்?" என்று கேட்டார் முதலாளி. "9,33,005 டாலர்கள்" என்றான் இளைஞன். அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" எனக் கேட்க, ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்" என்றான் இளைஞன். "ஆனால்,  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே?" என முதலாளி கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "உண்மைதான். வாடிக்கையாளர், இவற்றை வாங்கியபின், கடலில் சென்று மீன்பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று, ஒரு இருபது அடி நீளப் படகை, அவரிடம் விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்று கேட்டதற்கு, தன்னிடம் அவ்வளவு பெரிய கார் இல்லை என்றார். அதனால், ஒரு பெரிய லாரியையும் அவரிடம் விற்றேன். நடுவே, ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய கூடாரம் ஒன்றையும் விற்றேன் என்றான் இளைஞன். இதை நம்பமுடியாத முதலாளி, வாடிக்கையாளர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார்?" என்று கேட்டார். "இல்லை, அவர், தனக்கு தலைவலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன்பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன் என்று கூறினான் இளைஞன். அப்போது முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய்?" "அங்கு எல்.ஐ.சி.யில் ஏஜென்ட் ஆக இருந்தேன், ஏன் முதலாளி?" என்று இளைஞன் கேட்க,  "இங்கே வா, எனது நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையை பார்த்துக்கொள், நான் இந்தியா சென்று சிறிது நாள்கள் அங்கு வேலை பார்த்துவிட்டு வருகிறேன் என்றார் முதலாளி.

நம்மிடம் என்ன வளம் இல்லை? கூகுள் கணனி தொழில்நுட்ப மேலாளரான சுந்தர் பிச்சை அவர்கள், தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் சென்னையில், ஜவஹர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தவர். கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர்,  2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இவர், கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். எனவே, இவர்களைப் போன்று, தங்களின் திறமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். நான் இல்லையென்றால் வேறு யார் செய்வார்... இப்போது செய்யவில்லையென்றால் இனி எப்போது செய்வது?’ என்ற கேள்வியை கேட்டு, செயலில் இறங்க வேண்டும்.

பெங்களூரு, கிட்டார் இசைக்கலைஞர் அபிஷேக் பிரசாத் (Abhishek Prasad) அவர்கள், தகவல்தொழில்நுட்பத்தில் பணியாற்றியவர். இசை மீதிருந்த ஆர்வத்தால், 2012ம் ஆண்டில் அதைக் கைவிட்டு, இசையே மூச்சு என, தற்போது வாழ்ந்து வருகிறார். கிட்டார் இசைக்கலைஞனுக்கு விரல்கள்தான் ஆதாரம். ஆனால் ஒருநாள், இவர் கிட்டாரை மீட்டிக்கொண்டிருந்தபோதே, அதன் நரம்புகளுக்கிடையில் சிக்கி இடது கையின் மூன்று விரல்களும் முடங்கிப்போய் விட்டன. இதனால் கிட்டாரைத் தொட முடியாதவராக அவர் இருந்தார். இதைத் தொடர்ந்து, அண்மையில், ஒரு தனியார் மருத்துவமனையில் ஏழுமணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது மூளையில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணும் வகையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிட்டார் வாசித்துக்கொண்டேயிருந்தார். மருத்துவர்களும், அவரது மூளையிலுள்ள பிரச்சனைகளை அடையாளம் இனங்கண்டனர். இவர், அறுவை சிகிச்சை முழுவதும் விழித்திருந்து இசை மீட்டினார் என செய்திகள் பாராட்டியுள்ளன.

வாழ்வில் ஒரு குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்பாதையில் காணும் விமர்சனப் பார்வைகள் பற்றி கவலைப்படக் கூடாது. ஒருசமயம், பக்தன் ஒருவன், கடுமையாகத் தவம் இருந்தபின், ‘மற்றவர்களின் மனதைப் படிக்கின்ற திறனை அருள வேண்டும் சுவாமி’என்று கடவுளிடம் மன்றாடினான். கடவுளும் ‘வரம் தந்தேன் என்றார். சில நாள்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து, தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’என்றான். ‘ஏன்?’ என்றார் கடவுள். அனைவரும் என்னை, பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடியைக் கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை’என்றான். ‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக்கொள். என்ன நடக்கிறது என்று கவனி’என்றார் கடவுள். அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாமப் படுத்திருக்கான் குடிகாரப் பயல்‘ என்று சொல்லிவிட்டுப் போனான். பிறகு ஒரு திருடன் வந்தான். ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து, எவனோ இங்க படுத்துக் கிடக்கான் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு துறவி வந்தார், ‘யாரோ, முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’என்று சொல்லிவிட்டுப் போனார். சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார். ‘பார்த்தாயா உன்னைப் பற்றி, ஒவ்வொருவரும் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் துணிந்து செல். வெற்றி உனக்குத்தான் என்றார். ‘நான் இல்லையென்றால் வேறு யார் செய்வார்... இப்போது செய்யவில்லையென்றால் இனி எப்போது செய்வது?’ சிந்திப்போம்.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.