2017-07-25 15:12:00

குழந்தை சார்லி, அவனின் பெற்றோருக்காக திருத்தந்தை செபம்


ஜூலை,25,2017. பிரித்தானியாவில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டை (Charlie Gard), அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்வதற்கு, அவனின் பெற்றோர் தொடர்ந்திருந்த வழக்கைக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளவேளை, அக்குழந்தைக்காகவும், அவனின் பெற்றோருக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருக்கமாகச் செபிப்பதாக, திருப்பீடம் அறிவித்துள்ளது.

குழந்தை சார்லிக்கு, பரிசோதனை முறையில் சிகிச்சையளிப்பது எவ்விதத்திலும் பயன்தாராது என, அமெரிக்க ஐக்கிய நாட்டு நரம்பியல் நிபுணர் அறிவித்துள்ளதையடுத்து, சார்லியின் பெற்றோர் (Chris Gard 32, Connie Yates 31) சட்டமுறைப்படி எடுத்துவந்த தங்களின் முயற்சியை, நிறுத்திக்கொள்வதற்கு இத்திங்களன்று தீர்மானித்தனர்.

இத்தம்பதியரின் இத்தீர்மானத்தையடுத்து, இவர்களுக்கு இறைவன் ஆறுதல் வழங்குமாறு திருத்தந்தை செபித்து வருவதாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், கிரெக் பர்க் அவர்கள், இத்திங்கள் மாலையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், கடும் மனவேதனையில் இருக்கின்ற சார்லியின் பெற்றோருக்கு, ஆதரவாக இருக்குமாறு, பிரித்தானிய கத்தோலிக்க ஆயர்களும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, அத்தம்பதியருக்காகச் செபிக்குமாறும் விண்ணப்பித்துள்ளனர்.

இலண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த Chris Gard தம்பதியருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை சார்லி பிறந்தான். இவன் பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ளதுடன், அவனுக்கு மூளைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. இவனால், தன் தோள்களையும், கால்களையும் அசைக்க முடியாமலும், தானாக மூச்சு விடவோ அல்லது உணவு உண்ணவோ முடியாமலும் இருந்தான். இதைத் தொடர்ந்து, சார்லிக்கு இலண்டனிலுள்ள Great Ormond Street மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் விடயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவனுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகிச்சையளித்துப் பார்க்கலாம் என பெற்றோர், சட்டமுறையாக முயற்சித்தனர். அதனையும் தற்போது கைவிட்டுவிட்டனர் எனச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.