2017-07-25 16:02:00

கொல்லப்பட்ட அ.பணி Hamelன் ஓராண்டு நினைவுத் திருப்பலி


ஜூலை,25,2017. கடந்த ஆண்டு ஜூலை 26ம் தேதியன்று ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு இளையோரால், கொடூரமாய்க் கொல்லப்பட்ட 85 வயது நிரம்பிய அருள்பணி Jacques Hamel அவர்கள், அமைதியின் விதையை விதைத்துச் சென்றுள்ளார் எனக் கூறினார், பிரான்ஸ் நாட்டு பேராயர் ஒருவர்.

அருள்பணி Hamel அவர்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி, லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழுக்குப் பேட்டியளித்த, பேராயர் Dominique Lebrun அவர்கள், அருள்பணி Hamel அவர்களின் எளிமையும், எதார்த்தமுமான வாழ்வு, அருள்பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது எனக் கூறினார்.

அருள்பணி Hamel அவர்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவாக, அவர் கொல்லப்பட்ட Saint-Étienne-du-Rouvray ஆலயத்தில், இப்புதனன்று திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது. இதில் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Emmanuel Macron, உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினர், ப்ரெஞ்ச் முஸ்லிம் கழகத்தினர் என, பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இத்திருப்பலியின் இறுதியில், அருள்பணி Hamel அவர்களின் மார்பளவு உருவச்சிலை திறந்து வைக்கப்படும். மாலையில் அவரது கல்லறைக்கு செபப் பவனியும் நடைபெறும்.

மேலும், 2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கொல்லப்பட்ட அருள்பணி Hamel அவர்களை, அருளாளராக உயர்த்த தேவையான ஆய்வுப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இன்னும், மொகம்மது நதீம் (Mohammed Nadim) என்பவர், அருள்பணி Jacques Hamel அவர்களைப் பற்றிய நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

85 வயது நிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள், Saint-Étienne-du-Rouvray என்ற ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில், 19 வயது மதிக்கத்தக்க இரு இஸ்லாமிய தீவிரவாத இளையோர், அவரைக் கைப்பற்றி, பீடத்தின் முன்னால் மண்டியிட வைத்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.