2017-07-25 14:38:00

பாசமுள்ள பார்வையில்: ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு...


சிறுவன் ஒருவன், தன் படிப்புச் செலவுக்குப் பணம் சேர்க்க, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு, வீடாகச் சென்று பொருள்கள் விற்றுவந்தான். அன்றும் அவ்வாறே அவன் சென்றபோது, யாரும் அவனிடம் பொருள்கள் வாங்கவில்லை. வெயில் சுட்டெரித்தது. களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தபடி, அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம் பெண்ணொருவர் வெளியே வந்ததும், அவரிடம், "குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?" என்று கேட்டான். அப்பெண்ணோ, "ஒன்றுமில்லை. அன்பாகச் செய்யும் உதவிக்கு விலை எதுவும் கிடையாது என்று எங்கள் அம்மா சொல்லித்தந்திருக்கிறார்கள்" என்று கூறினார். ஹாவர்ட் கெல்லி (Howard Kelly) என்ற அச்சிறுவன், அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, அவன் உடலில் புது சக்தி பிறந்ததைப் போல் உணர்ந்தான். அவனுக்கு, இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கை பிறந்தது. தன் படிப்பை எப்படியும் தொடர்வது என்ற உறுதியும் பிறந்தது.

ஆண்டுகள் உருண்டோடின. அந்த இளம்பெண், விவரிக்கமுடியாத ஓர் அரிய நோயினால் துன்புற்றார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அவர் இருந்த ஊரில் இல்லையென்பதால், அருகிலிருந்த நகருக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில், ஹாவர்ட் கெல்லி, மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவரிடம் அப்பெண்ணின் மருத்துவ 'ரிப்போர்ட்' கொடுக்கப்பட்டது. மருத்துவர் கெல்லி, அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றார். அவர்தான் தனக்கு ஒரு 'டம்ளர்' பால் கொடுத்தவர் என்பதை, டாக்டர் கெல்லி புரிந்துகொண்டார். ஆனால், அப்பெண்ணுக்கு, டாக்டரை அடையாளம் தெரியவில்லை.

டாக்டர் கெல்லி தீவிர முயற்சிகள் எடுத்து, அப்பெண்ணைக் குணமாக்கினார். அப்பெண்ணின் மருத்துவச் செலவுக்குரிய 'பில்'லைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். 'பில்' வந்ததும், அதில் சில வார்த்தைகளை எழுதி, அப்பெண் இருந்த அறைக்கு 'பில்'லை அனுப்பி வைத்தார், டாக்டர் கெல்லி. 'பில்'லைப் பார்க்கத் தயங்கினார், அப்பெண். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், அந்த 'பில்' தொகையை தன்னால் கட்டமுடியாது என்று அவருக்குத் தெரியும். மனதை, ஓரளவு திடப்படுத்திக்கொண்டு, 'பில்'லைப் பார்த்தார். அந்தத் தொகை உண்மையிலேயே பெரிய தொகைதான். ஆனால், அந்தத் தொகைக்கருகே, "இந்த 'பில்' தொகை முழுவதும் கட்டப்பட்டுவிட்டது, ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு" என்று எழுதப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.