2017-07-26 15:31:00

திருத்தந்தையின் பெரு நாட்டுப் பயணத்திற்கு ஏற்பாடுகள்


ஜூலை,26,2017. 2018ம் ஆண்டு, சனவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணம் சிறப்புற அமைய, விசுவாசிகள் செபிக்குமாறு, அந்நாட்டு கர்தினால், யுவான் லூயிஸ் சிப்ரியானி அவர்கள் எழுதியுள்ள சிறப்பு மடல், லீமா உயர் மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு ஆலயங்களிலும் வாசிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை சிலே நாட்டின் Santiago, Temuco, Iquique ஆகிய மூன்று நகரங்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர், 18ம் தேதி முதல், 21ம் தேதி முடிய பெரு நாட்டின் Lima, Puerto Maldonado, Trujillo ஆகிய நகரங்களுக்குச் செல்வார்.

லீமாவில், திருத்தந்தை, சனவரி 21ம் தேதி, இளையோரையும், குடும்பத்தினரையும் சந்திக்கும் இரு நிகழ்வுகளில், 20 முதல் 50 இலட்சம் மக்கள் பங்கேற்கக்கூடும் என்பதால், இச்சந்திப்புகள் நிகழும் இடங்களை, லீமா உயர் மறைமாவட்டம், ஏற்கனவே தெரிவு செய்து, ஏற்பாடுகளைத் துவக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்திற்கு உதவி செய்யும் வகையில், 20,000த்திற்கும் அதிகமான இளையோரை, தன்னார்வத் தொண்டாற்ற இம்மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது என்று, இத்திருப்பயண நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் அருள்பணி லூயிஸ் கஸ்பார் உரிபே அவர்கள், லீமா வானொலி நிகழ்வில் பேட்டியளித்துள்ளார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.