2017-07-26 15:02:00

பாசமுள்ள பார்வையில்... – தாயெனும் கோவிலுக்கொரு கோவில்


வீரத்திலும், தானத்திலும், நிர்வாகத்திலும் சிறந்த விளங்கிய தமிழ் மன்னர், இராஜேந்திரசோழன் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அம்மன்னர், தாய்ப்பாசத்திலும் சிறந்து விளங்கியதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள சில கோவில்களுக்கு தன் அன்னையின் பெயரில் நில தானம், பொன் தானம் உள்ளிட்டவற்றையும் வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. அதேவேளை,  இராஜேந்திரசோழன், தனது தாய், வானவன் மாதேவி மீது கொண்ட அதீத பாசத்தினால், அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்து, சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியைத் தேர்வுசெய்து கோவில் கட்டியதாக, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. இராஜேந்திரசோழன் பதவியேற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டாலும், த‌ன் அன்னையின் நினைவாக, அவர் கட்டிய கோவில், இன்றைக்கும் புவனகிரி நகரின் சரித்திர குறியீடாக நின்று, அவரது பெயரையும், புகழையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், இன்றும் தாய்ப்பாசத்தை கோவில் கட்டி வெளிப்படுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்திற்கு அருகே, பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது, சுரேஷ்குமார் என்பவர்,  மறைந்த தனது தாய் தனபாக்கியம் என்பவருக்காக கட்டிய கோவில். கோவிலின் முகப்பில், "இக்கோவில் ஒரு தாய்க்காக மட்டுமே கட்டப்பட்டது அல்ல, அகிலத்து அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம்" என்ற வாசகமும், எழுதப்பட்டுள்ளது.

மேலும், நடிகரும் இயக்குனருமான இராகவா லாரன்ஸ், தன் தாய் கண்மணிக்காக, கோவில் கட்டியுள்ளார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், அவர் கட்டியுள்ள இராகவேந்திரா பிருந்தாவனத்தில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. ''என்னைக் கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு கருவறையில் சிலை வைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பதை, எனது இலட்சியமாகக் கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்குச் சொல்லவே நான் இந்த கோவிலைக் கட்டினேன்'' என உரைக்கும் இராகவா லாரன்ஸ், ''இக்கோவில், அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம்,'' எனவும் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.