2017-07-27 15:28:00

7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளின் விவரங்கள்


ஜூலை,27,2017. இந்தோனேசியா நாட்டின் யோக்யகர்த்தா (Yogyakarta) நகரில், ஜூலை 30, வருகிற ஞாயிறு முதல், ஆகஸ்ட் 9ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளின் விவரங்களை, செமராங் (Semarang) மறைமாவட்டம் வெளியிட்டுள்ளது.

"மகிழ்வு நிறைந்த ஆசிய இளையோர்! பன்முகக் கலாச்சாரமுடைய ஆசியாவில் நற்செய்தியை வாழ்வது" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளை, ஆசிய ஆயர் பேரவையின், இளையோர் மற்றும் குடும்பம் பணிக்குழு ஒருங்கிணைக்கிறது.

இந்தோனேசிய இளையோரைத் தவிர, வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் 2000த்திற்கும் அதிகமான இளையோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகள், 1999ம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் முதல் முறை சிறப்பிக்கப்பட்டது என்பதும், 2003ம் ஆண்டு, இந்த இளையோர் நாள் விழா இந்தியாவின் பெங்களூரு நகரில் சிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 18ம் தேதி முடிய, தென் கொரியாவின் Daejeon நகரில் சிறப்பிக்கப்பட்ட 6வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.