2017-07-27 15:53:00

90ம் ஆண்டை சிறப்பிக்கும் பார்வைத் திறனற்ற சகோதரிகள் சபை


ஜூலை,27,2017. பார்வைத் திறனற்ற அருள் சகோதரிகள், தங்கள் நாள் முழுவதையும் திருநற்கருணை ஆராதனையில் செலவிடுவதற்கென உருவாக்கப்பட்ட துறவு சபையொன்று தன் 90ம் ஆண்டை சிறப்பிக்கிறது.

1927ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, இத்தாலி நாட்டில், புனித லுயிஜி ஓரியோனே (Luigi Orione) அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைப்பணியாளர்கள் சிறிய சகோதரிகள் சபையினர், தற்போது ஸ்பெயின், பிலிப்பின்ஸ், கென்யா, அர்ஜென்டீனா பிரேசில் மற்றும் சிலே ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும், நற்கருணை வழிபாட்டில் ஈடுபடும் இச்சகோதரிகள், திங்களன்று வியாதியுற்றோர், செவ்வாயன்று இளையோர், புதனன்று அமைதி, வியாழன் - இறையழைத்தல், வெள்ளி - முதியோர், சனிக்கிழமை – குழந்தைகள், ஞாயிறு - குடும்பங்கள் என்று வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கருத்தை மையப்படுத்தி செபித்து வருகின்றனர்.

பார்வைத் திறனற்ற இச்சகோதரிகள், அண்மைய ஆண்டுகளில் கணணியை இயக்கும் வழிகளை கற்றுக்கொண்டு, கணணி வழியே தங்களை வந்தடையும் கருத்துக்களைத் திரட்டி, அவற்றிற்காக செபித்து வருவதாகக் கூறியுள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.