2017-07-27 14:58:00

திருத்தந்தையின் 5ம் ஆண்டு தலைமைப்பணி நினைவுப் பதக்கம்


ஜூலை,27,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் தலைமைப்பணியின் 5ம் ஆண்டை நினைவுகூரும் வகையில், வத்திக்கான் வடிவமைத்துள்ள பதக்கம் ஒன்று, ஜூலை 28 இவ்வெள்ளியன்று வெளியாகிறது.

தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற மூன்று உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கங்கள், வத்திக்கானின் அனைத்து நூலகங்கள், மற்றும் நினைவுப்பொருள் மையங்களில் கிடைக்கும் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மரியாஞ்செலா கிரிஷோட்டி (Mariangela Crisciotti) என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கத்தின் ஒரு புறம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணிக்கென தெரிவு செய்த இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பதக்கத்தின் மறுபுறம், ஒரு மனிதர் தன் கரங்களை நீட்டி, மற்றொருவருக்கு உதவுவதுபோலும், அவருக்கு அருகே ஒரு பெண், குழந்தை ஒன்றை ஏந்தியிருப்பதுபோலும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

உதவி பெறும் மனிதர் இயேசுவின் சாயலில் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இவ்வடிவத்தின் பின்னணியில், படகு ஒன்றும், "அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்" (மத். 25:35) என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான கடல்பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் குறிக்கும் வண்ணம் இந்தப் பதக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதக்கங்கள், 50 தங்கத்திலும், 1000 வெள்ளியிலும், 1500 வெண்கலத்திலும் வெளியாகின்றன என்று ZENIT கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறியுள்ளது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.