2017-07-27 15:42:00

மெக்சிகோ ஆயர் பேரவை அலுவலகத்திற்கு முன் குண்டுவெடிப்பு


ஜூலை,27,2017. ஜூலை 25, கடந்த செவ்வாயன்று, மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைமை அலுவகத்திற்கு முன் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, கத்தோலிக்கத் திருஅவை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்று, அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

மெக்சிகோ மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற குவாதலூப்பே அன்னை மரியா பசிலிக்காவுக்கு அருகே உள்ள மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைமை அலுவகத்திற்கு முன், செவ்வாய் அதிகாலை, 1.50 மணிக்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் யாருக்கும் எந்த பாதிப்பும் நிகழவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரான தாக்குதல் இல்லையெனினும், மெக்சிகோ நாட்டில் மிகப்  பரவலாக நிலவும் வன்முறை கலாச்சாரத்தை இந்நிகழ்வு மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்று, ஆயர் பேரவையின் செயலர், ஆயர் Alfonso Miranda Guardiola அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

உயிர்களை மதிக்கும் பண்பையும், அமைதியையும் அனைத்து மக்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று, கத்தோலிக்க ஆயர்கள் என்ற முறையில், இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று, மெக்சிகோ ஆயர்கள் கூறியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு, கடந்த ஜூன் மாதம் மட்டும், 2234 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று, CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNS / Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.