2017-07-28 15:25:00

பங்களாதேஷில் சிறுபான்மை மக்களுக்காக தலத்திருஅவை


ஜூலை,28,2017. பங்களாதேஷ் அரசியலமைப்பில், சிறுபான்மை இன மற்றும், சமயக் குழுக்கள், தெளிவான முறையில் குறிப்பிடப்படவில்லையென கவலை தெரிவித்து, சிறுபான்மை மக்கள் சார்பாக குரல் கொடுத்து வருகிறது, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை.

பங்களாதேஷில் சிறுபான்மை மக்களின் நிலைமை குறித்து, Aid to the Church in Need (ACN) நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, சிட்டகாங்க் பேராயர், மோசஸ் கோஸ்தா (Moses Costa) அவர்கள், பங்களாதேஷ் அரசு, சிறுபான்மை மக்களின் வாழ்வதற்குரிய உரிமையை அங்கீகரிக்காமல், அவர்களைப் புறக்கணிக்கின்றது என்று கூறினார்.

அரசு இவ்வாறு செயல்படுவதால், சிறுபான்மை மக்கள், தங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவதற்கு கஷ்டப்படுகின்றனர் என்றும், பேராயர் கோஸ்தா அவர்கள் கூறினார்.

பங்களாதேஷில் சிறுபான்மை இன மக்கள் துன்புறும்போது கத்தோலிக்கரும் துன்புறுகின்றனர் என்றும், பங்களாதேஷிலுள்ள கத்தோலிக்கரில் அறுபது விழுக்காட்டினர், சிறுபான்மை இனத்தவர் என்றும் தெரிவித்தார், சிட்டகாங்க் பேராயர், கோஸ்தா.

கடந்த ஆண்டில், சிட்டகாங்க் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தனது உயர்மறைமாவட்டத்திலுள்ள சிறுபான்மை இன மக்களுக்கு, அரசு உதவுவதற்கு மறுத்துவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார், பேராயர், மோசஸ் கோஸ்தா.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.