2017-07-28 15:03:00

பணியின்போது உயிர்துறந்த அ.பணி ஹாமெலை நினைவுகூர்வோம்


ஜூலை,28,2017. இந்த நம் காலத்தின் ஏனைய ஏராளமான மறைசாட்சிகளைப் போன்று,  பிறருக்குப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே உயிர் துறந்த அருள்பணி ஜாக் ஹாமெல் (Jacques Hamel) அவர்களை நினைவுகூர்வோம் என,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

85 வயது நிறைந்த அருள்பணி ஹாமெல் அவர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு, ஜூலை 26, இப்புதனன்று நினைவுகூரப்பட்டவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் (Instagram) சமூக வலைத்தளச் செயலியில், இவ்வாறு எழுதியுள்ளார்.

பிரான்சின், Rouen உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த, Saint-Etienne-du Rouvray பங்கு ஆலயத்தில், இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட, இந்த முதலாமாண்டு நினைவுத் திருப்பலியில், மனத்தளவில், தானும் ஒன்றித்திருத்திருப்பதாகவும், இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Rouen பேராயர் Dominique Lebrun அவர்கள், நிறைவேற்றிய இத்திருப்பலியில், பிரெஞ்சு அரசுத்தலைவர், Emmanuel Macron, பிரதமர்  Édouard Philippe உட்பட, ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களும், இஸ்லாமியரும் கலந்துகொண்டனர் என்று ஊடகச் செய்திகள்  கூறின.   

அருள்பணி ஹாமெல் அவர்கள், Saint-Etienne-du Rouvray பங்கு ஆலயத்தில், 2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, 19 வயது மதிக்கத்தக்க இரு தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்களால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இந்த இன்ஸ்டகிராமை, விருப்பம் எனத் தெரிவித்து பதிவுசெய்துள்ளவர்கள், இவ்வியாழன் மாலைவரை 1,22,200 பேர் என்றும், 740க்கும் அதிகமானவர்கள், தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர் என்றும், திருப்பீட சமூகத் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.