2017-07-28 15:29:00

வியட்நாம் மறைமாவட்டத்தில் மறைசாட்சிகள் நினைவு


ஜூலை,28,2017.  வியட்நாமில், கிறிஸ்தவ விசுவாசத்தைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மறைசாட்சிகளை நினைவுகூர்ந்தனர், அந்நாட்டு கத்தோலிக்கர்.

வியட்நாமின் மத்திய பகுதியிலுள்ள Qui Nhon மறைமாவட்டத்தில் விசுவாசம் பரவத்தொடங்கியதன் 400ம் ஆண்டு தொடக்க விழாவைச் சிறப்பித்தவேளையில், அந்நாட்டின் மறைசாட்சிகளும் நினைவுகூரப்பட்டனர் என்று, UCA செய்திக்குறிப்பொன்று கூறுகின்றது.  

Qui Nhon மறைமாவட்டத்தில் கத்தோலிக்க விசுவாசம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவின் தொடக்க விழா, ஜூலை 26, இப்புதனன்று ஆரம்பமானது. இவ்விழாவில், ஏறத்தாழ பத்தாயிரம் கத்தோலிக்கர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வின் தொடக்கத் திருப்பலியை, வியட்நாம் திருப்பீடத் தூதர் பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றினார்.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய, Qui Nhon மறைமாவட்ட ஆயர் Mathews Nguyen Van Khoi அவர்கள், Francesco Buzomi, Cristoforo Borri ஆகிய இரு இத்தாலிய அருள்பணியாளர்களும், Antonio Dias என்ற போர்த்துக்கீசிய அருள்சகோதரரும் இணைந்து, 1618ம் ஆண்டு ஜூலையில், Nuoc Man என்ற இடத்தில் முதல் மறைப்பணித்தளத்தை நிறுவினர் என்றும், இவ்விடம், Qui Nhon மறைமாவட்டத்தில் உள்ளது என்றும் அறிவித்தார்.

வியட்நாமில், 17ம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில், இருபதாயிரத்து, முன்னூறுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர், விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர். இந்த மறைசாட்சிகளுள், Francis Gagelin Kinh, Andrew Nguyen Kim Thong, Stephanus Cuenot The ஆகிய மூவரும், 1988ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1644ம் ஆண்டு ஜூலை 26ம் நாளன்று கொல்லப்பட்ட முதல் வியட்நாம் மறைசாட்சியான Andrew Phu Yen (1625-1644) அவர்களை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 2000மாம் ஆண்டு மார்ச் 5ம் தேதி அருளாளராக உயர்த்தினார். வியட்நாம் மறைக்கல்வி ஆசிரியர்களின் பாதுகாவலரான அருளாளர் Andrew Phu Yen அவர்களின் விழா ஜூலை 26ம் தேதியாகும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.