2017-07-29 14:23:00

குழந்தை சார்லியை இறைத்தந்தையிடம் ஒப்படைக்கின்றேன்


ஜூலை,29,2017. இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டு (Charlie Gard), ஜூலை 28, இவ்வெள்ளி மாலையில் உயிரிழந்ததையொட்டி, சார்லியின் பெற்றோருக்கும், அக்குழந்தையை அன்புகூர்ந்த எல்லாருக்கும் ஆறுதலாக, டுவிட்டரில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அபூர்வ நோயால் தாக்கப்பட்டிருந்த சார்லிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக, அவனின் பெற்றோர் நடத்திய நீண்ட கால சட்டமுறைப்படியான முயற்சிகளில், தனது ஆதரவைத் தெரிவித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சார்லி இறந்த செய்தி பற்றி அறிந்தவுடன், குழந்தை சார்லியை இறைத்தந்தையிடம் ஒப்படைக்கின்றேன் எனவும், சார்லியின் பெற்றோர் மற்றும், அக்குழந்தையை அன்புகூர்ந்த எல்லாருக்காகவும் செபிப்பதாகவும், கூறியுள்ளார்.

மேலும், குழந்தை சார்லியின் மரணத்தை அறிவித்த அவனின் தாய் Connie Yates அவர்கள், "எங்களின் அழகான சிறிய மகன் இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டான், மகனே, சார்லி, உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்" எனக் கூறியுள்ளார்.   

சார்லியின் இறப்பு செய்தியைத் தொடர்ந்து, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Gualtiero Bassetti உட்பட, பல சமய மற்றும், அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

சார்லியின் பெற்றோருக்கும், சார்லிக்கு நீண்ட காலமாக சிகிச்சை அளித்துவந்த இலண்டனின் Great Ormond Street மருத்துவமனைப் பணியாளர்களுக்கும், பிரித்தானிய கத்தோலிக்க சமூகத்தின் செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், இங்கிலாந்து கர்தினால் நிக்கோல்ஸ்.

தங்கள் மகனின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு, எல்லா வழிகளிலும் விடாது முயற்சி செய்த, சார்லியின் பெற்றோரின் (Chris Gard 32, Connie Yates 31) துணிச்சலான சான்று வாழ்வைப் பாராட்டியுள்ளதோடு, தனது செபங்களையும் தெரிவித்துள்ளார், இத்தாலிய கர்தினால் Bassetti.

உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில், ஜூலை 27, இவ்வியாழனன்று, இறக்கும் நிலையிலுள்ளவர்களைப் பராமரிக்கும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை சார்லி, இவ்வெள்ளி மாலையில் காலமானான். 

இலண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த Chris Gard தம்பதியருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தான் சார்லி. அதற்கு அடுத்த மாதத்திலேயே இவனின் நோய் கண்டுபிடிக்கப்பட்டு, இலண்டன் Great Ormond Street மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சார்லி, பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ளதுடன், அவனுக்கு மூளைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால், தன் தோள்களையும், கால்களையும் அசைக்க முடியாமலும், தானாக மூச்சு விடவோ அல்லது உணவு உண்ணவோ முடியாமலும் இருந்தான் சார்லி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.