2017-07-31 15:57:00

இயேசுவை அடைய, ஆர்வமும் தியாகமும் தேவை


ஜூலை,31,2017. நில‌த்தில் புதைந்திருக்கும் புதைய‌ல், ம‌ற்றும், விலைமதிப்ப‌ற்ற‌ முத்து ப‌ற்றிய‌  இயேசுவின் உவ‌மைக‌ள், உல‌காயுத‌ப் பொருட்க‌ளைத் தியாக‌ம் செய்து, இயேசுவை தேடுவ‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை வ‌லியுறுத்துகின்ற‌ன‌ என‌ இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்ப‌லி வாச‌கம் தந்த‌, இயேசுவின் உவ‌மைக‌ள் குறித்து த‌ன் மூவேளை செப‌ உரையில் எடுத்துரைத்த‌ திருத்தந்தை பிரான்சிஸ் அவ‌ர்க‌ள், ஒரு பொருளை தேடுவதில் இருக்கும் ஈடுபாடே, அது கிடைப்பதற்கான முன்நிபந்தனையாக இருக்கிறது என்றார்.

விலைமதிப்பற்ற ஒரு பொருளை அடையவேண்டுமெனில், அதன் மீது நாம் கொள்ளும் தீவிர விருப்பத்தால் நம் இதயம் பற்றியெரிய வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவில் குடிகொண்டிருக்கும் இறையரசை நாம் தேடிச்செல்ல வேண்டும், இங்கு இயேசுவே புதையலும், விலைமதிப்பற்ற முத்துமாவார் எனவும், தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசு எனும் விலைம‌திப்ப‌ற்ற‌ முத்தை நாம் க‌ண்டுகொண்ட‌பின், அத‌ற்காக‌ ந‌ம் உல‌காயுத‌ இன்ப‌ங்க‌ளை விட்டுக்கொடுக்க‌ நாம் த‌யாராக‌ இருக்க‌வேண்டும் என்ற‌ அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவ‌ர்க‌ள், இயேசுவைத் த‌விர‌ ம‌ற்ற‌வை அனைத்தையும் புற‌ந்த‌ள்ள வேண்டும் என‌ இவ்வுவமைக‌ள் கூற‌வில்லை, மாறாக‌, இயேசுவுக்கு வாழ்வில் முதலிட‌ம் கொடுப்ப‌தையே வ‌லியுறுத்துகின்ற‌ன‌ என‌வும் கூறினார்.

புதைய‌லை க‌ண்டுகொண்ட‌ விவ‌சாயியின் மகிழ்ச்சியையும், விலைம‌திப்ப‌ற்ற‌ முத்தைக் கண்டுபிடித்த வ‌ணிகரின் மகிழ்ச்சியையும் குறித்துப் படிக்கும் நாம், ஆறுதல் தரும் இயேசுவின் நெருக்கத்தை கண்டுகொண்டு, அதனால் இதயங்களில் மாற்றம் பெற்று, மற்றவர்களின் தேவைகள் குறித்து நம் மனங்களை திறந்தவர்களாகச் செயல்படுவோமாக என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைய‌ர‌சை அடைய‌ வேண்டுமெனில் அதைத் தேடுவ‌த‌ற்கான‌ ஏக்க‌மும், அத‌ற்காக‌ எதையும் தியாக‌ம் செய்யும் ம‌ன‌ப்பான்மையும் முக்கிய‌மான‌வை என்ப‌தை, த‌ன் மூவேளை செப‌ உரையில் வ‌லியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.