2017-07-31 15:59:00

வாரம் ஓர் அலசல் – தாயன்புக்கு இறப்பே கிடையாது


ஜூலை,31,2017.  நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றை, கையசைத்து, உதவிகேட்டார் ஒரு பெண். அதில் பயணம் செய்த ஓர் இளம் தம்பதி, வாகனத்தை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினர். அவர்களிடம், அந்தப் பெண், தான் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில், தனது மகள் அந்த வாகனத்திலிருந்து வெளியே வர இயலாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறாள், வாகனத்தின் கதவை என்னால் திறக்க முடியவில்லை, தயவுசெய்து உதவுங்கள் எனக் கெஞ்சினார். அத்தாயின் கண்ணீரில் கரைந்து, அந்த இளம் தம்பதியர் விரைந்து சென்றனர். அந்த இளைஞர் தனது சக்தியையெல்லாம் கூட்டி, வாகனத்தின் கதவைத் திறந்தார். உள்ளே அழுதுகொண்டிருந்த சிறுமியை வெளியே எடுத்தார். அந்தச் சிறுமியைத் தோளில்போட்டபடி, வாகனத்தின் முன்கதவைத் திறந்தார். அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அச்சிறுமியின் உண்மையான தாய், வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில், வீலைப் பிடித்தவாறு இறந்தநிலையில் இருந்தார். “தன்னுயிர் கொடுத்து பிள்ளையை வளர்ப்பவர் தாய். தாய் அன்புக்கு இறப்பு என்பதே கிடையாது. வேறொரு பெண்ணின் மகளைக் காப்பாற்ற, உதவி கேட்ட அந்தப் பெண், அவ்வழியே சென்றுகொண்டிருந்தவர். அந்தப் பெண்ணின் தாயுள்ளம், இவ்வாறு உதவி கோரியது.

தனது உயிர் போனாலும் பரவாயில்லை என, பிள்ளையின் உயிரைக் காப்பாற்றத் துணிபவர் தாய். கடந்த வாரத்தில், நீச்சல்குளம் ஒன்றில் மூச்சற்று, கண் மூடிய நிலையில் கிடந்த தன் மகனைக் காப்பாற்றுவதற்கு, அச்சிறுவனின் தாய், ஆதங்கத்தோடு எடுத்த விடாமுயற்சி, அங்கு இருந்த எல்லார் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தன. மகனைத் தரையில் கிடத்தி, முடிந்த அளவிற்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயற்சி செய்தார் அந்தத் தாய். சிறுவனின் நெஞ்சை பலமுறை அழுத்தியபின், வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தினார். இப்படி அவர் செய்தது எத்தனை முறைகள் எனக் கணக்கிட முடியவில்லை. அவசர மருத்துவ வாகனம் வரும்வரை, மகனின் நெஞ்சை அழுத்துவதும், வாயோடு வாய் வைத்து மூச்சை வழங்குவதுமாகவே இருந்தார் அந்தத் தாய். அங்கு நின்றவர்கள், இடையிடையே, சிறுவனைத் தூக்கி உலுக்கியும் பார்த்தனர். இருந்தபோதிலும், சிறுவனின் நிலையில் எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. சிறுவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள், நம்பிக்கையை இழந்தபோதிலும், அந்தத் தாய் விடாமுயற்சியோடு அதைத் தொடர்ந்து செய்தார். ஓர் உயிரைக் காப்பாற்றுவதில் நாம் சிறிதளவும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது, கிடைக்கும் வாய்ப்புகளை அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்பதற்கு, இந்தத் தாய் செய்த செயல், ஓர் எடுத்துக்காட்டு.

பிலிப்பீன்ஸ் நாட்டில், புற்றுநோய் பாதிப்பால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஜான் மார்வின் என்ற எட்டு வயது சிறுவனின் வாழ்நாள்களை நீடிக்க வைக்க, அவனின் தாய் மரிசா அவர்கள், நிதி உதவி கோரியுள்ளார். என் மகன் இன்னும் கொஞ்ச நாள் வாழவேண்டும் என, கெஞ்சிக் கெஞ்சி உதவி கேட்டிருக்கிறார் மரிசா. நோயுற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற, ஏழைத் தாய்மார், இவ்வாறு உதவிகள் கேட்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே இடம்பெறுகின்றது. ஆனால், போர்கள், இயற்கைச் சீற்றங்கள், இன்னும் பல காரணங்களால் எத்தனையோ தாய்மார், பல்வேறு விதங்களில் துன்புறுகின்றனர், மற்றும் துன்புறுத்தப்படுகின்றனர். பிள்ளைகள் கண்முன்பாகவே, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர், அவமானப்படுத்தப்படுகின்றனர் மற்றும், சுட்டுக் கொலைசெய்யப்படுகின்றனர். அண்மையில் (சன.31,2017 BBC) ஜெர்மனி நாட்டின், பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில், தாய் ஒருவர், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க வேண்டும் என்று அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டு, கட்டாயத்தின்பேரில் அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த 33 வயது நிரம்பிய காயத்ரி போஸ் என்ற அந்தத் தாய்க்கு, மூன்று வயதில் ஒரு குழந்தையும், ஏழு மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனராம். இவர், போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றுபவராம். பிராங்க்பர்ட் விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நகருக்குச் செல்லவிருந்த அந்தத் தாய், 'பிரெஸ்ட் பம்ப்' ( breast pump) என்ற, பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் கருவியை வைத்திருந்தார். ஆனால் அவர், குழந்தை இல்லாமல் தனியாகப் பயணம் செய்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைத் தடுத்து நிறுத்தினர். ''நீங்கள் பாலூட்டும் தாயா?'' உங்கள் குழந்தை எங்கே? உங்கள் குழந்தை சிங்கப்பூரில் உள்ளதா?'' என்று கேட்டுள்ளனர். ஒரு பெண் காவல்துறை அதிகாரி, கயாத்திரியை, ஓர் அறையில் வைத்து, பல கேள்விகளைக் கேட்டபின், அவர் பாலூட்டும் தாய் என்பதை நிரூபிக்கச் சொல்லியுள்ளார். காயத்திரியும், அந்த அதிகாரி சொன்னதுபோல செய்துள்ளார். இது முடிந்தபின், காயத்ரி அந்த அதிகாரியிடம், இவ்வாறு நீங்கள் ஒரு நபரைக்கூட நடத்தக்கூடாது, நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? என்று கண்ணீர்மல்கக் கேட்டுள்ளார். 45 நிமிடங்கள் நடந்த அந்த நிகழ்வு குறித்து, பிபிசி ஊடகத்திடம், காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

அச்சமயத்தில் நான் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால், செய்யச் சொன்னதை செய்துகொண்டிருந்தேன். என்னைச் சிரமப்படுத்த அவர்கள் முடிவு செய்திருந்ததால், எனது நிலை என்ன எனக் கவலைப்பட்டேன்.  எனக்கு என்ன நடந்தது என்று அந்த அறையில் இருந்து வெளியே வந்த பிறகுதான் உணர்ந்தேன். நான் அழத் தொடங்கினேன். மிகவும் கவலையடைந்தேன். அந்நிகழ்வு என்னை மிகவும் அவமானப்படுத்துவதாகவும், மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. சந்தேகம் ஏற்பட்டால் பொருள்களைச் சோதனை செய்வதற்கான தேவையை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு நபரின் தன்மானத்தை மீறும் அளவில் அது நடந்தால், அது சரியல்ல, அது எல்லை மீறல். இது குறித்து ஜெர்மன் காவல்துறையிடம் புகார் செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 7ம் தேதி வரை, தாய்ப்பால் வாரமாக, ஐ.நா. நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்கும் நோக்கத்தில் இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுன்றது. World Alliance for Breastfeeding Action (WABA) எனப்படும், தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும், உலக கூட்டமைப்பினால், 1992ம் ஆண்டில் தாய்ப்பால் வாரம் முதலில் கடைப்பிடிக்கப்பட்டு, உலக அளவில் பரப்பப்பட்டது. பின், ஐ.நா.வின், உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), ஐ.நா.வின் குழந்தைநல நிதி நிறுவனம் (UNICEF United Nations International Children’s Emergency Fund) ஆகிய இரண்டும், தாய்ப்பால் வாரத்தைக் கடைப்பிடிக்க ஊக்குவித்தன. தற்போது, இந்நிறுவனங்களால், 120க்கும் மேற்பட்ட நாடுகளில், தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. தாய்மார்களுக்கிடையே தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதற்கு ஏனையோரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி மருத்துவர்கள் பல ஆலோசனைகளைச் சொல்கின்றனர். குழந்தைகளுக்கு இயற்கை அளிக்கும் அருட்கொடை தாய்ப்பால். உலகத்தில் மிகச் சிறந்தது தாய்ப்பாலே. பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான். அதற்கு இணையான உணவு வேறு எதுவுமே இல்லை. குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்திகளும் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுகின்றன. தாய்ப்பால் சுத்தமானது. கலப்படமில்லாதது. கலப்படம் செய்ய முடியாதது. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. நோய்க் கிருமிகளை எதிர்க்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு மட்டுமே உள்ளது. தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளைவிட, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக அறிவாளிகளாகத் திகழ்வார்கள். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று, உடல்பருமானகும் தன்மை, அதிக மனஅழுத்தம் (Hyper Tension), சர்க்கரை நோய்த் தாக்கும் அபாயம் போன்றவை குறைவாகவே உள்ளன.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் என்பது குறள்.  

பிள்ளைப் பேற்றில் தாய் அடையும் மகிழ்ச்சி பெரிது. ஆனால், தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும்போது, அவனைப் பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியைவிட, பெரிதும் மகிழ்வார் தாய் என்று கூறுகின்றது குறள். அதேநேரம், பிள்ளைகளும், பிறர் புகழுமாறு வாழ்ந்து பெற்றவரை மகிழ்விக்க வேண்டும்.

சான்றோன் என்பவர், பண்பு நிறைந்தவர், மிக உயர்ந்த குணங்களுள்ள நல்லவர், நல்ல பிள்ளை, வீரர், கல்விக் கேள்வியில் மிகுந்தவர், அறிவினால் பெரியவர், அறிவுடையார், பெரியோர், அறிவில் நிறைந்தோர் என, உரையாளர்கள் பலவாறு விளக்கம் கூறுகின்றனர். ஒரு பிள்ளை, சான்றோனாக உருவாவதற்கு, அவனது தாயின் பங்கு அதிகம். அன்பும், பரிவும் பொங்க, நல்ல பழக்க வழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி, உயரிய அறநெறிப் பண்புகள் கொண்டு தம் மக்களை மேம்பாடுற பேணி வளர்ப்பார் தாய். எனவே அன்பர்களே, தாய்மாரும் மனிதர்களே. எனவே, அவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், அவர்களின் மேன்மை உணர்ந்து, தாய்மார் போற்றும் பிள்ளைகளாக வாழ்வோம். இறப்பே இல்லாத தாயன்பின் பெருமையைப் பறைசாற்றுவோம். பிள்ளைகளை பெரிய ஆளாக்கி பார்ப்பதற்காகவே, குடிகாரக் கணவனின் கொடுமையை, காலம் முழுவதும் தாங்கிக்கொண்டு காலத்தை கழிக்கிறவர் தாய்! எத்தனை பாரம் தாங்கினாலும், பிள்ளைப் பாரத்தை இறக்கிவிடாத ஒரே ஜீவன் பெற்ற தாய் மட்டுமே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.