2017-08-01 15:20:00

இஞ்ஞாசியார் விழாவன்று இயேசு சபை தலைமையகத்தில் திருத்தந்தை


ஆக.01,2017. புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் விழாவாகிய ஜூலை 31, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலுள்ள இயேசு சபை தலைமையகத்திற்குச் சென்று, மதிய உணவருந்தி, அச்சபையினரையும் வாழ்த்தினார்.

திருஅவையின் முதல் இயேசு சபை திருத்தந்தையாகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஒவ்வோர் ஆண்டும், இவ்விழாவன்று, வத்திக்கானுக்கு அருகிலுள்ள இயேசு சபை தலைமையகத்திற்குச் சென்று, தன் உடன் இயேசு சபை சகோதரர்களை வாழ்த்தி, அவர்களுடன் உரையாடி வருகிறார்.

மேலும், புனித இஞ்ஞாசியாரின் விழாவையொட்டி, லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீட சார்பு தினத்தாளுக்குப் பேட்டியளித்த, உலகளாவிய இயேசு சபைத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள், புனித இலொயோலா இஞ்ஞாசியார் இன்று இருந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கருத்து செறிந்த பதிலளித்தார்.

வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த அருள்பணி சோசா அவர்கள், அந்நாட்டின் தற்போதைய நிலை பற்றிய தனது எண்ணங்களையும், உலகளாவிய இயேசு சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற கடந்த ஒன்பது மாதங்கள் பற்றிய சிந்தனைகளையும், இயேசு சபையினரின் மறைப்பணிகளையும் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மனிதரின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் ஒப்புரவு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, இயேசு சபையின் ஒவ்வோர் உறுப்பினரும் பணியாற்ற வேண்டும் என்றும், ஒப்புரவு என்பது, இறைவனோடும், மனிதர்களோடும், சுற்றுச்சூழலோடும் இடம்பெறும் இணக்க வாழ்வாகும் என்றும் கூறினார், அருள்பணி சோசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.