2017-08-01 15:38:00

உலக சுற்றுலா தினத்திற்கு கர்தினால் டர்க்சனின் செய்தி


ஆக.01,2017. சுற்றுலாக்கள், மக்களின், குறிப்பாக, மிகவும் வாய்ப்பிழந்த மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு, கிறிஸ்தவர்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சுற்றுலா, வளர்ச்சிக்கு ஒரு கருவி” என்ற தலைப்பில், வருகிற செப்டம்பர் 27ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும், உலக சுற்றுலா தினத்திற்கென செய்தி வெளியிட்ட, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், வளர்ச்சிக்கு உதவும் சுற்றுலாக்கள் பற்றி சிந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சிக்கு சுற்றுலா என, ஐ.நா. நிறுவனம், 2017ம் ஆண்டை அறிவித்து சிறப்பித்து வருவதும் பற்றியும் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள, கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலா, வளரச்சிக்கும், ஏழ்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கைக்கும் முக்கியமான கருவியாக இருந்தாலும், உண்மையான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியோடு மட்டும் நிறுத்தப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

உண்மையான வளர்ச்சி, ஒவ்வொரு மனிதரின், மற்றும் ஒருங்கிணைந்த மனிதரின் வளர்ச்சியைப் பேணி வளர்ப்பதாக அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார், கர்தினால் டர்க்சன்.

2016ம் ஆண்டில், உலக அளவில் 120 கோடிப் பேர் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர் என்றும், உலகளவில் பத்து விழுக்காடு உள்நாட்டு உற்பத்திக்கும், மொத்த ஏற்றுமதியில் 7 விழுக்காடுக்கும், சுற்றுலா உதவியுள்ளது என்றும், 11 வேலைவாய்ப்புகளில் ஒன்று வீதம் சுற்றுலாவில் கிடைத்தது என்றும், உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.