2017-08-01 15:10:00

கைம்மாறு கருதாமல் நன்மைகளை ஆற்ற திருத்தந்தை அழைப்பு


ஆக.01,2017. “ஒவ்வொரு நாள் வாழ்வின் சூழல்களில், பலன்களைத் தேடாமல் நன்மைகளை ஆற்றும்போது, அவை பயன் தருவதாக அமையும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட்,01, இச்செவ்வாயன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின் விழாவை முன்னிட்டு, டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் நற்செயல்களை, கைம்மாறு கருதாமல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உலக மீட்பர் துறவு சபையை ஆரம்பித்த, ஆயரான புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் 1696ம் ஆண்டு பிறந்து, 1787ம் ஆண்டு இறைபதம் அடைந்தார்.

மேலும், பிரேசில் நாட்டின் Paraíba ஆற்றில் அன்னை மரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டதன் 300ம் யூபிலி ஆண்டை முன்னிட்டு, அப்பரெசிதா (Aparecida) திருத்தலத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் இளையோருக்கு, செய்தி  ஒன்றை அனுப்பியுள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வின் நிச்சயமற்ற நேரங்களில் அன்னை மரியாவின் பாதுகாவலை நாடுமாறு, இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1717ம் ஆண்டு அக்டோபரில், Paraíba ஆற்றில், அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், ஐரோப்பாவில் கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜூலை மாதம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருத்தந்தையின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, ஆகஸ்ட் 02, இப்புதன்கிழமையிலிருந்து ஆரம்பமாகின்றது. இன்னும், வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் காலை திருப்பலி, வருகிற செப்டம்பர் பாதிக்குமேல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதிவரை திருத்தந்தை மேற்கொள்ளும், கொலம்பிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்குப் பின், சாந்தா மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலிகளை, திருத்தந்தை ஆரம்பிப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.